Train cancelled: விழுப்புரம் -புதுச்சேரி ரயில் சேவை ரத்து: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரம் - புதுச்சேரி பாசஞ்சர் ரயில் நாளை முதல் 6 நாட்களுக்கு ரத்து

விழுப்புரம்: திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விழுப்புரம் வழியாக இயக்கப்படும் விழுப்புரம் - புதுச்சேரி பாசஞ்சர் ரயில் நாளை முதல் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
விழுப்புரம் - புதுச்சேரி பாசஞ்சர் ரயில் ரத்து
விழுப்புரம் - புதுச்சேரி பாசஞ்சர் ரயில், நாளை (17ம் தேதி) முதல் 22 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே, திருச்சி கோட்ட அலுவலக செய்திக்குறிப்பு:
திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விழுப்புரம் வழியாக இயக்கப்படும் சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து காலை 5:25 மணிக்கும், புதுச்சேரியில் இருந்து காலை 8:05 மணிக்கும் புறப்படும் விழுப்புரம் -புதுச்சேரி பாசஞ்சர் ரயில்கள் (எண்- 66063 மற்றும் 66064) நாளை (17ம் தேதி) முதல் 22 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து காலை 9:45 மணிக்கு விழுப்புரத்திற்கு புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பாசஞ்சர் ரயில் (எண் 66045) வரும் 19 மற்றும் 22ம் தேதிகளில் முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்.
அதே போன்று விழுப்புரத்தில் இருந்து பகல் 1:40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் (எண் 66046) வரும் 19 மற்றும் 22ம் தேதிகளில் முண்டியம்பாக்கத்தில் இருந்து பகல் 1:55 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
விழுப்புரத்தில் இருந்து பகல் 2:35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம் மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் (எண்-66019), ஜூலை 19 மற்றும் 22ம் தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக 3:05 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 ரயில் போக்குவரத்தில் மாற்றம்
ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, 11 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
கோவை - நாகர்கோவில் காலை 8:00 மணி ரயில், நாளை முதல் 31 வரை, திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்
திருச்சி - ராமேஸ்வரம் காலை 7:05 மணி ரயில், நாளை மற்றும் 17, 18, 21, 22, 23, 25, 28, 29, 30, 31ம் தேதிகளில், மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும்
ராமேஸ்வரம் - திருச்சி மாலை 3:00 மணி ரயில், நாளை மற்றும் 17, 18, 21, 22, 23, 25, 28, 29, 30, 31ம் தேதிகளில், மானாமதுரையில் இருந்து புறப்படும்.
மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்
மயிலாடுதுறை - செங்கோட்டை பகல் 12:10 மணி ரயில், நாளை மற்றும் 20, 23, 27, 30ம் தேதிகளில், மாற்று பாதையாக திருச்சி, காரைக்குடி, விருதுநகர் வழியாக இயக்கப்படும்
செங்கோட்டை - மயிலாடுதுறை காலை 6:55 மணி ரயில், நாளை மற்றும் 18, 19, 20, 21, 22, 24, 25, 26, 27, 30ம் தேதிகளில் விருதுநகர், காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்
கன்னியாகுமரி - மேற்கு வங்கம் மாநிலம் ஹவுரா காலை 5:50 மணி ரயில், வரும் 19, 26ம் தேதிகளில் மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும்
கன்னியாகுமரி - தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் காலை 5:15 மணி ரயில், வரும் 18, 25ம் தேதிகளில் மானாமதுரை, திருச்சி வழியாக செல்லும்
கேரளா மாநிலம் குருவாயூர் - சென்னை எழும்பூர் இரவு 11:15 மணி விரைவு ரயில், வரும் 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26ம் தேதிகளில், காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும்
நாகர்கோவில் - மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை சி.எஸ்.டி., காலை 6:15 மணி விரைவு ரயில், வரும் 20, 24, 27ம் தேதிகளில் விருதுநகர், திருச்சி மாற்றுப்பாதை வழியாக செல்கிறது
நாகர்கோவில் - கோவை காலை 8:00 மணி ரயில், வரும் 26, 27ம் தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, திருச்சி வழியாக செல்லும்
நாகர்கோவில் - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா காலை 9:15 மணி ரயில், வரும் 26ம் தேதி விருதுநகர், காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். இதனால், இந்த விரைவு ரயில்கள் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




















