IPL : 2023 ஐபிஎல் தொடர் குறித்த அசத்தலான அப்டேட்! பிசிசிஐ தலைவர் கங்குலி வெளியிட்ட சூப்பர் தகவல்!
2023 ஐபிஎல் தொடர் தொடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்று ஐபிஎல் கிரிக்கெட் தொடர். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும். கடந்த மூன்று சீசன்களாக ஐபிஎல் போட்டிகள் குறிப்பிட்ட இடங்களிலும் மட்டும் நடைபெற்று வந்தன. இதனால் பலரும் ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த முறை ஐபிஎல் தொடர் எப்போதும் போல் சொந்த மைதானம் மற்றும் வெளி மைதானம் முறையில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன்படி இம்முறை ஐபிஎல் தொடர் அணிகளின் சொந்த ஊர் மற்றும் வெளியூர்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home and away format will return in IPL from 2023 season ✅#IPL2023
— Subhayan Chakraborty (@CricSubhayan) September 22, 2022
மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முதல் முறையாக மகளிருக்கான ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் தொடர் யுஏஇயில் நடைபெற்றது. அதன்பின்னர் 2021ஆம் ஆண்டு குறிப்பிட்ட இடங்களில் ஐபிஎல் தொடர் பாதி நடைபெற்றது. இந்தச் சூழலில் மீண்டும் ஐபிஎல் தொடர் அனைத்து ஊர்களிலும் இம்முறை நடைபெற உள்ளது.
மகளிர் கிரிக்கெட் வளர்ச்சியை இந்தியாவில் மேலும் மேம்படுத்த மகளிர் ஐபிஎல் உடன் சேர்த்து யு-15வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. மாநிலங்கள் அளவில் இந்த மகளிர் ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என்று கருதப்படுகிறது.
மகளிர் ஐபிஎல்:
நீண்ட நாட்களாக எழுந்த கோரிக்கைக்கு பிறகு பிசிசிஐ மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொடரில் 6 அணிகள் வரை பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக 2018ஆம் ஆண்டு முதல் மகளிர் டி20 சேலஞ்ச் என்ற பெயரில் இரண்டு அணிகளுடன் தொடங்கிய தொடர் 3 அணிகளுடன் தற்போது நடைபெற்று வருகிறது. 2020ஆம் ஆண்டு மட்டும் கொரோனா பரவல் காரணமாக இந்தத் தொடர் நடத்தப்படவில்லை.
இந்தச் சூழலில் இந்தாண்டு மகளிர் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அப்போது நடைபெறவில்லை. 2020ஆம் ஆண்டு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்தது. அதன்பிறகு மகளிர் ஐபிஎல் தொடர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அப்போது அது வெளியாகவில்லை.
தற்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டி20 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணியிடம் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மகளிர் ஐபிஎல் தொடர் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்த கோரிக்கைகளுக்கு பிறகு பிசிசிஐ முதல் முறையாக மகளிர் ஐபிஎல் தொடரை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.