IND vs NZ Hockey WC 2023: உலகக்கோப்பை ஹாக்கி... அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.
![IND vs NZ Hockey WC 2023: உலகக்கோப்பை ஹாக்கி... அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா! IND vs NZ Hockey World Cup 2023 India lose to New Zealand at penalty shootout out of World Cup IND vs NZ Hockey WC 2023: உலகக்கோப்பை ஹாக்கி... அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறிய இந்தியா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/22/220c4b8294a933888dd03e0bf44e6a4a1674402713009224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
15ஆவது ஹாக்கி உலக கோப்பை தொடர் ஜனவரி மாதம் 13 ம் தேதி தொடங்கி, ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நடப்பு உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால், சொந்த மண்ணில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய ஹாக்கி அணி களம் இறங்கியது.
தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த நான்கு பிரிவுகளை சேர்ந்த, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன.
”டி” பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில், வலுவான ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தியது.
இதைத்தொடர்ந்து, இங்கிலாந்துடனான லீக் போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், கடைசி லீக் போட்டியில் வேல்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தி அசத்தியது. இதனால் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கோல் கணக்கின் அடிப்படையில் ”டி” பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி நாக்-அவுட் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இதையடுத்து நான்கு பிரிவுகளிலும் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3வது இடங்களை பிடித்த அணிகளுக்கு இடையேயான, நாக்-அவுட் சுற்று இன்று தொடங்கியது.
காலிறுதி இடத்தை உறுதி செய்வதற்கான நாக்-அவுட் சுற்றின் இன்றைய இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா இன்று எதிர்கொண்டது. உலக ஹாக்கி தரவரிசை பட்டியலில் இந்தியா 6-வது இடத்திலும், நியூசிலாந்து 12-வது இடத்திலும் இடத்திலும் உள்ளன.
எந்தவித தேவையில்லாத தவறுக்கும் இடம் கொடுக்காமல் இந்திய அணி விளையாடினால், எளிதில் காலிறுதிக்கு தகுதி பெற முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. இவ்விரு அணிகளும் இதுவரை 44 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 24-ல் இந்தியாவும், 15-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் இந்தியா அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது.
ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளும் 4 கோல் அடித்த சம நிலையில் இருந்தன. ஆனால், பெனால்டி ஷூட் அவுட்டில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. இதனால் இந்தியா தொடரில் இருந்து வெளியேறியது.
இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு, புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி தொடங்கியது. இதில், வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி காலிறுதியில் நடப்பு சாம்பியனான பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)