Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
Huma Qureshi: நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் கொல்லப்பட்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Huma Qureshi: நடிகை ஹுமா குரேஷியின் உறவினர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஹுமா குரேஷியின் உறவினர் கொலை:
பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷியின் உறவினரான ஆசிஃப் குரேஷி, டெல்லி நிசாமுதின் பகுதியில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தை பார்க் செய்வது தொடர்பான பிரச்னையில் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. ஜங்புரா போகல் லேன் பகுதியில் வியாழனன்று இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான காலா படத்தில், ஜரினா எனும் கதாபாத்திரத்தில் நடித்து ஹுமா குரேஷி கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 2022ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில், காவல்துறை அதிகாரியாக நடித்து அசத்தி இருந்தார். இந்தியில் பிரபலமான மற்றும் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஹுமா குரேஷி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடந்தது என்ன?
வியாழனன்று வழக்கம்போல் தனது பணியை முடித்துக் கொண்டு, அசிஃப் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் நுழைவு வாசல் கதவை அடைத்தப்படி பக்கத்து வீட்டாரின் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. இதனை கண்ட அசிஃப் உரிமையாளரை அழைத்து வாகனத்தை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மேலும் ஒருவருடன் சேர்ந்து ஆபாசமாக தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கூர்மையான ஆயுதங்களை கொண்டும் தாக்கியுள்ளனர். காயமடைந்த அசிஃப் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் அற்பமான விஷயத்திற்காக அசிஃப் மீது அந்த கும்பல் ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியதாக, அவரது மனைவி சாய்னாஸ் மற்றும் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். ஏற்கனவே இதே பிரச்னைக்காக குற்றம்சாட்டப்பட்டவர்கள், அசிஃப் உடன் சண்டையிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை:
சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய தற்போது ஒரு தேடுதல் வேட்டை நடந்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதுவரை, யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் அதிகாரிகள் அந்தப் பகுதியிலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும், கிடைக்கக்கூடிய அனைத்து சாட்சிகளையும் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.



















