தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட யுவராஜ் - ஹேசல் ஜோடி.. நெகிழ்ச்சியாக ஒரு செய்தி..
'தாய்மார்களுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம், பெற்றோராக சம பொறுப்பை எடுத்துக் கொள்வதுதான் என்று நான் நம்புகிறேன்.' என யுவராஜ் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் - ஹேசல் கீச் தம்பதியினருக்கு கடந்த ஜனவரியில் ஆண் குழந்தை பிறந்தது. அன்னையர் தினத்தை முன்னிட்டு அந்த குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பெற்றோர்கள், ஒரு வாழ்த்தையும் எழுதி உள்ளனர்.
கடந்த கால இந்திய கிரிக்கெட்டில் யுவராஜ் சிங்கின் பங்கு இன்றியமையாதது என்று கூறும் அளவிற்கு யுவராஜ் சிங் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வந்தார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் அபாரமாக விளையாட கூடிய திறமை படைத்த இவர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் ஹீரோவாக திகழ்ந்தார். இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளின் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக இருந்த யுவராஜ் சிங், 2019-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். யுவராஜ் மற்றும் நடிகை ஹேசல் கீச் நவம்பர் 30, 2016 அன்று ஃபதேகர் சாஹிப் குருத்வாராவில் பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரியில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
View this post on Instagram
இந்த நிலையில் அன்னையர் தினத்தை ஒட்டி, ஹேசல் தனது சிறிய குழந்தையுடன் பல புகைப்படங்களை பகிர்ந்து, "என்னை தாய்மைக்கு வழிநடத்திய தாய்மார்களுக்கு, எனது கடினமான நாட்களில் என்னை பாதுகாத்த, என்னை ஆறுதல்படுத்திய, நேசித்த மற்றும் ஏற்றுக்கொண்டவர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்... நீ இல்லாமல் நான் இன்று தாயில்லை. குடும்பத்தின் மதிப்பை நீதான் எனக்குக் கற்றுத்தந்தாய். நீ எப்போதும் பாசமாக இருக்க வேண்டியதில்லை, எங்களோடு சண்டையிடலாம், ஆனால் நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் ஒன்றாக இருப்போம். எங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்!" என்று பதிவிட்டு இருந்தார்.
View this post on Instagram
மறுபுறம், யுவராஜ் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர் ஒரு சிறிய குறிப்பையும் எழுதியுள்ளார், அதில், “இந்த அன்னையர் தினத்தில் ஒரு தந்தையாக எனது பயணத்தைப் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தாய்மார்களுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த விஷயம், பெற்றோராக சம பொறுப்பை எடுத்துக் கொள்வதுதான் என்று நான் நம்புகிறேன். டயப்பர் இடுவதோ, உணவளிப்பதோ, நான் இப்போதுதான் கற்றுக்கொண்டுள்ளேன், என் மனைவி அதில் கைதேர்ந்தவர்." என்று எழுதி உள்ளார்.