WPL 2023: மகளிர் ஐபிஎல்-லில் முதல் போட்டி... இந்தந்த அணிகள்தான் முதலில் மோத இருக்கின்றன..?
மும்பை அணியை முகேஷ் அம்பானியும், அகமதாபாத் அணியை கவுதம் அதானியும் ஏலம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்குப் பிறகு, நடப்பாண்டில் முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. முதல் முறையாக நடைபெற உள்ள இந்த சீசன், எப்போது நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படாவிட்டாலும், சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மார்ச் 4ம் தேதி லீக் போட்டிகள் தொடங்கி, மார்ச் 24ஆம் தேதி அன்று இறுதிப் போட்டி நடைபெறும் என கூறப்படுகிறது. 5 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 22 ஆட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனுக்கான அதிகாரபூர்வமான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்தந்த அணிகள்தான் முதல் போட்டியில் விளையாட போவதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தற்காலிக அட்டவணையை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகளிர் டி20 லீக்கின் தொடக்க ஆட்டத்தில் மும்பை vs அகமதாபாத் அணிகள் மோத இருக்கின்றன. இதை ஒருசில செய்தி நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
மும்பை அணியை முகேஷ் அம்பானியும், அகமதாபாத் அணியை கவுதம் அதானியும் ஏலம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து போட்டிகளும் மும்பையில் நடத்த ஏற்பாடு:
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு வீராங்கனைகள் அதிக பயணத்தைத் தவிர்ப்பதற்காக முழு போட்டியும் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் போட்டி உள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்திலும், இரண்டாவது போட்டியாக ப்ராபோர்ன் ஸ்டேடியத்தில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி வடிவம்:
மகளிர் ஐபிஎல்-லில் 5 அணிகள் மட்டுமே பங்கேற்கும் நிலையில் லீக் மற்றும் பிளேஆஃப் சுற்றுகள் மட்டுமே நடைபெற இருக்கிறது. லீக் சுற்றின் முடிவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும். முதலிடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரை விளையாடுகின்றன. அதில், வெற்றிபெறும் அணி முதலில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாடும்.
13ம் தேதி வீராங்கனைகளுக்கான ஏலம்:
இந்த தொடரில் பங்கேற்க உள்ள வீராங்கனைகளுக்கான ஏலம் வரும் 13ம் தேதி மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் பங்கேற்பதற்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த வீராங்கனைகளும் முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை சுமார் ஆயிரம் பேர் ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயர்களை முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஒரு அணிக்கு 18 பேர் என மொத்தமே 90 வீரர்கள் தான் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர். இதன் காரணமாக வரும் 13ம் தேதி நடைபெற உள்ள ஏலத்தில், மொத்தமே 150 பேரின் பெயர்கள் தான் பட்டியலிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏலத்தொகை:
தங்களுக்கு வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்க ஒரு அணிக்கு மொத்தமாக 12 கோடி ரூபாய் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலையாக ரூ.50 லட்சம், ரூ.40 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்திய அணிக்காக விளையாடாத வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் அடிப்படைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அணிகள் ஏலம்:
கடந்த மாதம் நடைபெற்ற அணிகளுக்கான ஏலத்தில் ஐந்து அணிகளும் சேர்த்து மொத்தமாக ரூ.4669.99 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டன. இதன்படி, மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான அணிகளுக்கான ஏலம் , 2008 ஆம் ஆண்டு அறிமுகமான ஆண்களுக்கான ஐபிஎல் அணிகளின் ஏலத்தொகையை விட அதிகமாகும்.
அணிகளின் விவரங்கள்:
அகமதாபாத் அணியை ரூ.1289 கோடிக்கு அதானி ஸ்போர்ட்ஸ் லைன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. மும்பை அணியை ரூ. 912.99 கோடிக்கு இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், பெங்களூரு அணியை பெங்களூரு சேலஞ்சர்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. டெல்லி அணியை ரூ.810 கோடிக்கு jsw gmr கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், லக்னோ அணியை ரூ.757 கோடிக்கு கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் ஏலத்தில் எடுத்துள்ளன. இதன் மூலம் பிசிசிஐ-க்கு ரூ.4669.99 கோடி வருவாயாக கிடைத்துள்ளது.