ODI World Cup 2023: தொடங்குகிறது ஐசிசி உலகக் கோப்பை - போட்டியையே மாற்றும் திறன் கொண்ட அந்த 10 வீரர்கள் யார்?
ODI World Cup 2023: ஐசிசி உலகக் கோப்பையில் போட்டியின் போக்கையே தனி ஆளாக மாற்றும் திறன் கொண்ட 10 வீரர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ODI World Cup 2023: ஐசிசி உலகக் கோப்பையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 10 வீரர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
உலகக் கோப்பை போட்டி:
10 நாடுகள் பங்கேற்கும் ஐசிசியின் உலகக்கோப்பை இன்று தொடங்குகிறது. நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற்ற உள்ள இந்த போட்டியில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை அறிய, உலகம் முழுவதுமிருந்து கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில் குவிய தொடங்கியுள்ளனர். இந்நிலையில், போட்டியின் போக்கையே தனி ஆளாக மாற்றும் திறன் வாய்ந்த வீரர்களாக எதிர்பார்க்கப்படும் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சில அனுபவம் வாய்ந்த வீரர்களோடு, சில இளம் வீரர்களின் பெயர்களும் அடங்கும்.
01. பாபர் அசாம், பாகிஸ்தான்
பாகிஸ்தானின் அணியின் கேப்டனும், அண்மைக்காலங்களில் தொடர்ந்து ரன் சேர்ப்பதில் வல்லவராகவும் உள்ள பாபர் அசாம், ஐசிசிய்ன் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். கடந்த ஆறு வருடங்களாக ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் தொடர்ந்து நீடிக்கிறார். ஆசியக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது பாபர் அசாமின் ஃபார்ம் மற்றும் கேப்டன்ஷிப் செயல்பாட்டை சார்ந்தே உள்ளது.
02. விராட் கோலி, இந்தியா:
உலக கிரிக்கெட்டின் மிக முக்கிய அடையாளமாக இருப்பவர்களில் விராட் கோலி தவிர்க்க முடியாதவராக இருக்கிறார். 34 வயதான இவர் ரன் மெஷின் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். 2011ம் ஆண்டு இந்தியா கோப்பையை வென்றபோது சிறிய பங்காற்றிய கோலி, நடப்பு தொடரில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டின் தூணாக கருதப்படுகிறார். அதோடு, பேட்டிங்கில் பல புதிய சாதனைகளை படைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
03. ரஷித் கான், ஆப்கானிஸ்தான்:
உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும், எந்த மைதானத்திலும் விக்கெட் வேட்டை நடத்தக் கூடியவராகவும் இருக்கிறார் ரஷித் கான். கடந்த 2015ம் ஆண்டு தனது 17வது வயதில் அறிமுகமான இவர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து இதுவரை 336 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். திகைப்பூட்டும் கூக்லிகளும், விக்கெட்டுகளை வீழ்த்தும் இடைவிடாத திறனும் அவரை கடந்த எட்டு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அணியின் முக்கியத் தூணாக மாற்றியுள்ளது. இவரது இருப்பு எதிரணிகளின் வெற்றியை கடினமாக்குகிறது.
04. ஆடம் ஜாம்பா, ஆஸ்திரேலியா:
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் ஆஸ்திரேலியா களமிறங்கும்போது, கைதேர்ந்த லெக் ஸ்பின்னரான ஜம்பா அணியில் இருப்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலமாகும். 31 வயதான அவர் பார்ட்னர்ஷிப்களை முறியடிப்பதிலும், அணிக்கு முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை எடுப்பதிலும் வல்லவர். கடந்த 20 மாதங்களில் 45 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 50 ஓவர் வடிவத்தில் ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான பந்துவீச்சாளராகவும் ஜாம்பா திகழ்கிறார்.
05. ஹென்ரிச் கிளாசென், தென்னாப்பிரிக்கா
பவர் ஹிட்டர்கள் நிறைந்த தென்னாப்ரிக்கா அணியில், களத்தில் இறங்கியதுமே பவுண்டரிகளையும், சிக்சர்களையும் விளாசுவதில் க்ளாசென் தனித்து நிற்கிறார். தனது பெரும்பாலான ரன்களை பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலம் சேர்ப்பதால், , தற்போதைய பேட்டர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்களில் ஒருவராக உள்ளார். 32 வயதான அவர் ஒரு திறமையான விக்கெட் கீப்பராக, ஒரு தொடரில் 10 விக்கெட் கீப்பிங் டிஸ்மிஸ்கள் மற்றும் 200 ரன்கள் எடுத்த சாதனையை படைத்துள்ளார். கடந்த மாதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 83 பந்துகளில்-174 ரன்கள் எடுத்தார்.
06. பென் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து
தற்போதைய தலைமுறையில் இங்கிலாந்தின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக உள்ள பென் ஸ்டோக்ஸ், 2019ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றினார். ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்று இருந்த ஸ்டோக்ஸ், மீண்டும் நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்காக அணிக்கு திரும்பியுள்ளார். அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், 124 பந்துகளில் 184 ரன்களை குவித்து அசத்தினார். கடந்த சில மாதங்களாக அவர் பந்துவீசாவிட்டாலும், முழுநேர பேட்ஸ்மேன் மற்றும் பீல்டராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் இங்கிலாந்து அணியின் முக்கிய பலமாக கருதப்படுகிறார்.
07. ஷகிப் அல் ஹசன், வங்கதேசம்
வங்கதேசத்திற்கு மட்டுமின்றி கிரிக்கெட் உலகில் எந்த காலத்திலும் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக விளங்குபவர் ஷகிப் - அல் ஹசன். இடது கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் இடது கை பேட்டர் ஐசிசி ஒருநாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக கோலோச்சி வருகிறார். 36 வயதான அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 308 விக்கெட்டுகள் மற்றும் 7,384 ரன்களுடன் வியக்க வைக்கும் சாதனைகளை படைத்துள்ளார்.
08. ஷஹீன் ஷா அப்ரிடி: பாகிஸ்தான்
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் ஃபார்ம் அந்த அணியின் பேட்டிங் யூனிட்டை வலுப்படுத்துகிறது என்றால், இருப்பது போல், வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடியின் பந்து வீச்சு தான் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறது. 2018 ஆம் ஆண்டில் 18 வயது இளைஞராக சர்வதேச அரங்கில் அறிமுகமானதிலிருந்து, அஃப்ரிடி பாகிஸ்தானின் பவுலிங் யூனிட்டின் பலமாக உள்ளார். புதிய பந்தில் விக்கெட் எடுப்பதில் அவர் கைதேர்ந்தவராக உள்ளார்.
09. மிட்செல் சாண்ட்னர்: நியூசிலாந்து
சாந்தமான ஆல்-ரவுண்டராக இருந்தாலும் நியூசிலாந்து அணியின் முக்கியத் தூணாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் 32 வயதான சாண்ட்னர். 2019 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி வெற்றியில் முக்கியமான பங்காற்றியதோடு, கடினமான சூழ்நிலைகளில் கேப்டன் கேன் வில்லியம்சனின் முக்கிய பந்துவீச்சாளராக இருந்தார். உலகின் தலைசிறந்த பீல்டர்களில் ஒருவராகவும் உள்ளார்.
10. மதீஷா பத்திரனா, இலங்கை
கடந்த ஆண்டு இலங்கை கிரிக்கெட்டின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒருவராக இருப்பது பத்திரனா. கடந்த ஜூன் மாதம் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானதில் இருந்து 10 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் லசித் மலிங்கா பாணியில் ரவுண்ட்-ஆர்ம் ஃபாஸ்ட் பவுலிங் ஆக்ஷனில் அசத்தி வருகிறார். 20 வயதான பத்திரனா விளையாட முடியாத யார்க்கர்களையும். அசத்தியமான பவுன்சர்களையும் இணைத்து வீசி எதிரணிகளை திணறைடித்து வருகிறார்.