ODI WC 2023 India Team: உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் பலம் & பலவீனம் என்ன? - ஓர் அலசல்
உலக்கக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தொடர்பாக, இந்த தொகுப்பில் அறியலாம்
ODI WC 2023 India Team: உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் விவரங்கள் மற்றும் போட்டி நடைபெறும் மைதானங்கள் உள்ளிட்ட மொத்த விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளன.
உலகக்கோப்பை தொடர்:
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள, ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் 5ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் மோதும் இந்த கிரிக்கெட் திருவிழாவை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்தியாவிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
இதனிடையே, ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் பலம், பலவீனம், எதிர்த்து விளையாட உள்ள அணிகளின் விவரங்கள், விளையாட உள்ள மைதானங்கள் உள்ளிட்ட மொத்த விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்திய அணி விவரம்:
கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், இஷான் கிஷன், அஷ்வின், முகமது ஷமி, இஷான் ஷமி கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் பலம்:
உலகக்கோப்பை தொடர் உள்ளூரில் நடைபெறுவது இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. இங்குள்ள அனைத்து மைதானங்களிலும் விளையாடிய அனுபவம் இந்திய வீரர்களுக்கு உள்ளது. இதனால், இந்திய அணியை உள்ளூரில் வீழ்த்துவது என்பது எதிரணிகளுக்கு எளிதான காரியமில்லை. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். அண்மைக் காலங்களாக அவர்கள் நல்ல ஃபார்மிலும் உள்ளனர்.
ஸ்ரேயாஷ் அய்யர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் நடுகள வீரர்களாக நம்பிக்கை அளித்து வருகின்றனர். ஆஸ்திரேலியா தொடரில் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜடேஜா ஆகியோர் பினிஷர்களாக செயல்படுவார்களாக இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களை கருத்தில் கொண்டு அஷ்வின், குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகிய 3 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர். இது ரோகித் சர்மாவிற்கு கூடுதல் ஆப்ஷன்களை வழங்குகிறது. வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோர் ஆசியக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில், சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. அதோடு, இந்திய அணியின் சிதோஷ்ன நிலையை உணர்ந்து செயல்படும் அனுபவம் மற்ற எந்த அணி வீரர்களுக்கு அந்த அளவிற்கு கிடையாது.
இந்திய அணியின் பலவீனம்:
இந்திய அணியின் முக்கிய பலவீனமாக கருதப்படுவது 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியில் இருந்த ஜாகீர் கான், நெஹ்ரா போன்ற ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் தற்போது இல்லாதது தான். அதோடு, சமீப காலமாக இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மேலும் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளில் உள்ள, இடது கை வேகப்பந்து வீச்சாளர்களும் இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஆல்-ரவுண்டர் ஜடேஜா அண்மை காலங்களில் பெரிதாக சோபிக்காதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு மாற்றாக எந்தவொரு வீரரும், அணியில் இடம்பெறவில்லை.
இந்திய அணியின் போட்டி விவரங்கள்:
தேதி | போட்டி விவரங்கள் | மைதானம் |
அக்டோபர் 8 | இந்தியா - ஆஸ்திரேலியா | எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை |
அக்டோபர் 11 | இந்தியா - ஆப்கானிஸ்தான் | அருண் ஜெட்லி மைதானம், டெல்லி |
அக்டோபர் 14 | இந்தியா - பாகிஸ்தான் | நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத் |
அக்டோபர் 19 | இந்தியா - வங்கதேசம் | புனே மைதானம் |
அக்டோபர் 22 | இந்தியா - நியூசிலாந்து | தர்மசாலா மைதானம் |
அக்டோபர் 29 | இந்தியா - இங்கிலாந்து | லக்னோ மைதானம் |
நவம்பர் 2 | இந்தியா - இலங்கை | வான்கடே மைதானம், மும்பை |
நவம்பர் 5 | இந்தியா - தென்னாப்ரிக்கா | ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா |
நவம்பர் 12 | இந்தியா - நெதர்லாந்து | சின்னசாமி மைதானம், பெங்களூரு |
உலகக்கோப்பையில் இந்திய அணி:
1983 மற்றும் 2011ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த 2015ம் மற்றும் 2019 ஆகிய இரண்டு உலகக்கோப்பை தொடர்களிலும், இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறினாலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு உலகக்கோப்பை தொடரை கூட இந்திய அணி வெல்லாத நிலையில், உள்ளூரில் நடைபெறும் இந்த தொடரை கைப்பற்ற அதிக தீவிரம் காட்டி வருகிறது.