Icc Fined India: போட்டியில் வென்ற இந்திய அணிக்கு அபராதம் விதித்து ஐசிசி உத்தரவு.. என்ன நடந்தது? எதற்காக இந்த நடவடிக்கை?
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால், இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியின் போது பந்துவீச, கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் இந்திய அணிக்கு 60 சதவிகிதம் அபராதம் விதித்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு அணி பந்து வீசி முடிக்கவில்லை என்றால், ஒவ்வொரு ஓவருக்கும் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும். அந்த வகையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்திய அணி பந்து வீசி முடிக்காமல், 3 ஓவர்களுக்கு கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டதால், 60 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
🚨 JUST IN: India have been fined for maintaining a slow over-rate in the first #INDvNZ ODI.
— ICC (@ICC) January 20, 2023
Details 👇https://t.co/HavBvJADyq
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாட உள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி அபாரம்:
தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா 34 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, விராட் கோலி 8 ரன்களும், இஷான் கிஷன் 5 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில், நியூசிலாந்தின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி தள்ளினார். ஒன் மேன் ஆர்மியாக அபாரமாக ஆடிய அவர் 87 பந்துகளில் சதத்தை எட்டிய நிலையில், 146 பந்துகளில் 208 ரன்களை அசத்தினார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் குவித்தது.
நியூசிலாந்து அணி சேஸிங்:
இதனையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் 40 ரன்கள் எடுத்த நிலையில், கிட்டதட்ட அடுத்த 5 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 110 ரன்களுக்கு அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மிட்செல் பிரேஸ்வெல் தனி ஒருவனாக நியூசிலாந்து அணியை மீட்டெடுக்க போராடினார். அபராமாக ஆடிய பிரேஸ்வெல் சதமடித்து அசத்தினார். மிட்செல் சாண்ட்னரும் தன் பங்கிற்கு அரைசதமடித்து அவுட்டானார். 7வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 162 ரன்கள் குவித்து அசத்தியது.
பயம் காட்டிய பிரேஸ்வெல்
ஆனால் சாண்ட்னருக்கு பின்னால் வந்த வீரர்கள் சோபிக்க தவறியதால் நிர்ணயிக்கப்பட்ட 49.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி 337 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. பிரேஸ்வெல் நாலாபுறமும் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்து, இந்திய ரசிகர்களுக்கு தோல்வி பயத்தை கண் முன்னே காட்டினார். இதனால், கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணி பந்துவீச்சாளர்களை நேர்த்தியாக சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டி இருந்தது. இதனால் இந்திய அணியால் குறிப்பிட்ட நேரத்திற்குள், 50 ஓவர்களை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதன் காரணமாக, தற்போது இந்திய அணிக்கு ஐசிசி 60 சதவிகிதம் அபராதம் விதித்துள்ளது.