பாரதிராஜாவின் பிள்ளையாக பிறந்தது தான் இதற்கு காரணம்..மனோஜ் பற்றி தம்பி ராமையா வேதனை
பிரபலங்களுக்கு பிள்ளையாக பிறப்பது என்பது ரொம்ப கஷ்டமான ஒன்று என மறைந்த நடிகர் மனோஜூக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் தம்பி ராமையா தெரிவித்துள்ளார்

மனோஜ் பாரதிராஜா
நடிகர் மற்றும் இயக்குநர் மனோஜின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜா இயக்கிய தாஜ்மகால் படத்தில் நாயகனாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அறிமுகமானர் மனோஜ். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரியளவில் ஹிட் அடித்தாலும் படம் சுமாரான விமர்சனங்களே பெற்றது.
தாஜ்மகால் படத்தைத் தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் நடித்தார் மனோஜ். இந்த படத்தில் இவரது எளிமையான கதாபாத்திரமும் இயல்பான நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது. அடுத்தடுத்து வந்த படங்களும் பெரிதாக கவனிக்கப்படவில்லை. நடிகர் இயக்குநர் என சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொள்ள மனோஜ் போராடினாலும் பெரிய உயரத்திற்கு அவர் செல்லாதது வருத்தமே. அதுவுல் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் திரையுலகிற்கு அறிமுகமானபோது அவர் பெரிய உயரத்திற்கு செல்வார் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது. பல முயற்சிகள் செய்தும் சினிமாவில் மனோஜிற்கு பெரிய பட வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. இதனால் நான் 8 ஆண்டுகள் தீவிர மன உளைச்சலுக்கு சென்றுவிட்டதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மனோஜ் பற்றி தம்பி ராமையா
இதனால் அவர் தீவிர மது பழக்கத்திற்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது. மனோஜ் உடலுக்கு பல்வேறு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நடிகர் விஜய் , முதலமைச்சர் முக ஸ்டாலின் , நடிகர் சூர்யா, உள்ளிட்ட பலர் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் தம்பி ராமையா பத்திரிகையாளர்களை சந்தித்தார் . அப்போது. அவர் " பெரிய பிரபலங்களின் பிள்ளையாக பிறப்பது ரொம்ப கஷ்டமானது. அப்பாவின் பெயரை காப்பாற்றவில்லை ? அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? என ஏதாவது கேட்டுக் கொண்டே இருப்பார்கள். பெரிய மனிதர்களுக்கு பிள்ளையாக பிறந்து அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றபடி இருக்க முடியவில்லை என்றால் அவர்களால் யாரிடமும் சரியாக பேசக்கூட முடியவில்லை. அப்படிதான் மனோஜூக்கு இந்த மன உளைச்சல் வந்திருக்கும் என நினைக்கிறேன். " என தம்பி ராமையா தெரிவித்துள்ளார்

