நியூசி To வெஸ்ட் இண்டீஸ் : டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியை துவம்சம்செய்த அணிகள்
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை அதிக முறை தோற்கடித்த அணிகள் யார் யார்?
டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றுகள் நாளை முதல் தொடங்க உள்ளன. இந்திய கிரிக்கெட் அணி தன்னுடைய முதலாவது சூப்பர் 12 போட்டியில் நாளை மறுநாள் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்திய அணி ஒரு முறையும், பாகிஸ்தன் அணி ஒரு முறையும் டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
2007ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய- பாகிஸ்தான் அணிகள் இதுவரை 5 முறை மோதியுள்ளனர். அவற்றில் 5 முறையும் இந்திய கிரிக்கெட் அணியே வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக 2007ஆம் ஆண்டு இந்திய அணி பவுல் அவுட் முறையில் பாகிஸ்தான் அணியை குரூப் சுற்றுப் போட்டியில் வீழ்த்தி அசத்தியது. பாகிஸ்தான் மட்டுமல்லாது பங்களாதேஷ்,அயர்லாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி தோல்வியையே சந்தித்ததில்லை.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை அதிக முறை தோற்கடித்த அணிகள் யார் யார்?
நியூசிலாந்து:
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 2 முறை நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. முதல் முறையாக 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் 10 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை இந்தியாவை வென்றது. அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 79 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து மகத்தான வெற்றியை பெற்றது. 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக அக்டோபர் 31ஆம் தேதி களமிறங்கிறது. இந்த இரண்டு தோல்விகளுக்கு இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இலங்கை:
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை இலங்கை அணியும் 2 முறை வீழ்த்தியுள்ளது. அதில் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் 2014ஆம் ஆண்டு இலங்கை அணி இந்தியாவை இறுதிப் போட்டியில் தோற்கடித்து முதல் முறையாக டி20 உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதற்கு முன்பாக 2010ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 பிரிவில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. அதில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ்:
டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி வெஸ்ட் இண்டீஸ் அணி தான். வெஸ்ட் இண்டீஸ் அணி 2012 மற்றும் 2016ஆம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2009 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர்களில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது. அதற்கு பின்னர் 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரையிறுதியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடியது. அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அத்துடன் இரண்டாவது முறையாக கோப்பையையும் வென்றது.
மேலும் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இந்தியாவை 2 முறைக்கு மேல் தோற்கடித்த ஒரே அணி வெஸ்ட் இண்டீஸ் மட்டும் தான். அந்த அணி இந்தியாவை 3 முறை தோற்கடித்துள்ளது. இம்முறை இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வேறு பிரிவில் உள்ளதால் நாக் அவுட் சுற்றில் இரண்டு அணிகளும் மோதும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:ஷாரூக்கான், ப்ரீத்தி ஜிந்தா வரிசையில் தீபிகா படுகோனே... புதிய ஐபிஎல் அணி ரெடி?