Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் சொத்து ஆவணங்கள், தற்போது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை, அம்மாடி, இவ்வளவா என்று வியக்கும் அளவிற்கு உள்ளன.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற உத்தரவு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்ட தங்க, வெள்ளி நகைகள் மற்றும் நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும், பெங்களூரு விதான சவுதாவில் உள்ள அரசு கரூவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், கர்நாடக அரசின் வசமுள்ள ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க் கோரி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு செலவு கட்டணமாக ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு செலுத்திவிட்டு, நகைகளை பெற்றுக்கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனிடையே, சொத்துகளுக்கு உரிமை கோரி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர் தொடர்ந்த வழக்கினால், சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பின்னர் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதனால், ஜெயலலிதாவின் நகைகள், சொத்து ஆவணங்களை, பிப்ரவரி 14, 15 தேதிகளில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க பெங்களூரு சிற்ப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, இன்று 6 பெட்டிகளில் நகைகள், ஆவணங்கள் வைக்கப்பட்டு, தமிழக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
தமிழக அரசிடம் 27 கிலோ நகைகள், 1,526 ஏக்கர் சொத்து ஆவணங்கள் ஒப்படைப்பு
தங்கம், வைரம், வைடூரியத்தால் ஆன 27 கிலோ நகைகள் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில், ஜெயலலிதாவின் 1.2 கிலோ எடையுள்ள தங்க ஒட்டியாணமும் அடங்கும். மேலும், ஒரு கிலோ எடையுள்ள தங்க கிரீடம், ஜெயலலிதாவின் உருவம் பொறிக்கப்பட்ட தங்கத் தட்டு, வாட்ச்சுகள், 60 கிராம் எடையுள்ள தங்க பேனா ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் உள்ள 1,526 ஏக்கர் நிலங்களின் ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஒப்படைக்கப்பட்ட நகைகள், சொத்துகளை என்ன செய்வது என்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும், சசிகலா ரூ.20 கோடியை அபராதமாக செலுத்தியுள்ளதாகவும், வழக்கிற்கான செலவாக கர்நாடக அரசு ரூ.7 கோடி கேட்டுள்ளதாகவும், அரசு வழக்கறிஞர் கிரண் ஹாவர்கி தெரிவித்துள்ளார்.

