விருதுவிழாவுக்கு 100 கோடியா ? யாருக்கு பிரயோஜனம்... கிழித்து தொங்கவிட்ட ராஜஸ்தான் எதிர்கட்சித் தலைவர்
பாலிவுட் திரை நட்சத்திரங்களை கெளரவிக்கும் நிகழ்ச்சியான IIFA விருது விழாவுக்கு ராஜஸ்தான் அரசு 100 கோடி நிதி செலவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

இந்திய திரைத்துறை நட்சத்திரங்களை கெளரவிக்கும் வகையில் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான IIFA விருதுகள் கடந்த மார்ச் 8 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. திரைப்படம் , வெப் சீரிஸ் , ஆவணப்படம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
ஸ்பான்சர்கள் கிடைப்பதில் பிரச்சனை
பொதுவாக IIFA விருது விழா வெளிநாடுகளில் மட்டுமே நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஸ்பான்சர்கள் கிடைக்காததால் இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடத்த திட்டமிட்டப் பட்டது. ராஜஸ்தான் அரசு இந்த நிகழ்ச்சிக்கு 100 கோடி ரூபாய் நிதி வழங்க முன்வந்தது. இதனால் ராஜஸ்தான் சுற்றுலாத் துறை மேம்படும் என அரசு சார்பாக கூறப்பட்டது. ராஜஸ்தானில் தற்போது பா.ஜ.க கட்சியின் பஜன்லால் ஷர்மா முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த விருதுவிழாவில் 100 கோடி நிதி செலவிட்டது குறித்து தற்போது எதிர்கட்சிகள் விமர்சனம் தெரிவித்துள்ளார்கள்
100 கோடி எங்கே போனது
ராஜஸ்தான் எதிர்க்கட்சி தலைவரான திகாராம் ஜல்லி சட்டசபையில் இது குறித்து இப்படி கூறியுள்ளார். ராஜஸ்தானின் சுற்றுலாத் துறையை ப்ரோமோட் செய்யவே 100 கோடி செலவிடப்பட்டதாக அரசு சார்பாக கூறப்பட்டது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் முக்கிய ஸ்பான்சராக ஷோபா ரியாலிட்டடி & நெக்ஸா என்கிற தனியார் கட்டுமான நிறுவனமே அதிகம் விளம்பரப்படுத்தப்பட்டது. விஸ்கிராஃப்ட் என்கிற தனியார் நிறுவனம் IIFA விருது விழாவை ஒருங்கிணைத்தது. அரசுக்கு 7 லட்சம் மதிப்புள்ள 7 சிறப்பு பாஸ்கள் வழங்கப்பட்டன. ஆனால் ஒரு அமைச்சருக்கு கூட இந்த பாஸ் வந்து சேரவில்லை. எல்லா இடங்களிலும் IIFA வை ப்ரோமோட் செய்ய பேனர்கள் வைக்கப்பட்டன. இந்த நிகழ்வினால் ராஜஸ்தான் மாநிலத்திற்கு என்ன லாபம் ? ராஜஸ்தான் ரைசிங் என்கிற நிகழ்வு இரவு 10 மணிக்கு முடிக்கப்பட்டபோது IIFA விருதுவிழா மட்டும் விதிகளை மீறி அதிகாலை 3:30 மணி வரை நடத்தப்பட்டது . அதே நேரத்தில் சிகர் மாவட்டத்தில் உள்ள கோயில் கட்டுமானத்திற்கு 100 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் அதன் கட்டுமானத்தில் எந்த முன்னேற்றமுல் இல்லை. ஆனால் இந்த விருது விழாவிற்கு ஆளும் கட்சி முக்கியத்துவம் கொடுத்துள்ளது " என அவர் விமர்சித்துள்ளார்.
அரசு விஸ்கிராஃப்ட் நிறுவனத்துடன் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பொதுப்பார்வைக்கு முன்வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

