(Source: ECI/ABP News/ABP Majha)
Tamim Iqbal Retirement: 'ஓய்வு பெறுகிறேன்' உலககோப்பைக்கு முன் குண்டைத் தூக்கிப் போட்ட தமீம் இக்பால்.. பின்னடைவில் வங்கதேசம்..!
வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவர் ஏற்கனவே டி 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மற்றும் கடைசியாக ஏப்ரல் மாதம் ஒரு டெஸ்டில் விளையாடினார். தற்போது வங்கதேசம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் அந்த அணி தோல்வியைச் சந்தித்தது. ஓய்வை அறிவித்துள்ள தமீம் இக்பாலுக்கு 34 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமீம் இக்பால் ஓய்வு:
தமீம் இக்பாலைப் பொறுத்தவரை, அவர் வங்காளதேசத்திற்காக 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,134 ரன்களை 38.89 சராசரியில் 10 சதங்கள் விளாசியுள்ளார். அவர் கடைசியாக ஏப்ரல் மாதம் அயர்லாந்துக்கு எதிராக டெஸ்ட்டில் விளையாடினார். ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, அவர் 241 போட்டிகளில் விளையாடி 14 சதங்கள் மற்றும் 56 அரை சதங்களுடன் 36.62 சராசரியுடன் 8,313 ரன்கள் குவித்துள்ளார். வங்களாதேச அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராகவும் தமீம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுகிறார். 2007 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேச அணியில் தமீமும் இருந்தார்.
தனது ஓய்வு குறித்த அறிவிப்பில், ”என்னால் முடிந்ததை வங்கதேச அணிக்காகச் செய்துள்ளேன். இந்த தருணத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசிபி (வங்கதேச கிரிக்கெர் வாரியம்) அதிகாரிகள், எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது நீண்ட பயணத்தில் என்னுடன் இருந்தவர்கள். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. ரசிகர்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் அன்பும் என் மீதான நம்பிக்கையும் வங்கதேச அணிக்கு எனது சிறந்ததை வழங்க என்னைத் தூண்டியது. என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் சிறப்பாக இருக்க, உங்கள் பிரார்த்தனைகளை நான் கேட்க விரும்புகிறேன். தயவுசெய்து என்னை உங்கள் பிரார்த்தனையில் வைத்துக் கொள்ளுங்கள்" என்று தமீம் குறிப்பிட்டுள்ளார்.
தமீம் இக்பால் ஓய்வு குறித்து அறிவித்துள்ளதால் உலகக்கோப்பை தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டன் யார் செயல்படுவார் என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஷகிப் அல்ஹசன் தற்போது டி20 கேப்டனாகவும், லிட்டன் தாஸ் டெஸ்ட் போட்டிகளில் வங்காளதேச அணியின் கேப்டனாகவும் செல்படுகின்றனர். பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அவர்களில் ஒருவரை உலகக் கோப்பை வரையாவது கேப்டனாக நியமிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.