AUS vs NZ Match Highlights: இறுதிவரை திக்.. திக்.. காட்டடி அடித்த ரச்சின் - நீஷம்; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி
AUS vs NZ Match Highlights: ஆஸ்திரேலியா அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் குவித்ததால், நியூசிலாந்துக்கு 389 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளில் பாதி ஆட்டங்கள் முடிவடைந்து விட்ட நிலையில், இன்று அதாவது அக்டோபர் 28ஆம் தேதி பலமான அணிகளாக இருப்பதுடன் புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் உள்ள நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொண்டன.
இந்த போட்டி இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி டிராவிஸ் ஹெட் விளாசிய அதிரடி சதத்தினால் மிகவும் சவாலான ஸ்கோரினை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. அதாவது 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் குவித்ததால், நியூசிலாந்துக்கு 389 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
மிகச் சிறிய மைதானத்தில் சவலான ஸ்கோரை எட்ட களமிறங்கிய நியூசிலாந்து அணி களமிறங்கியது முதல் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வந்தது. தொடக்க ஜோடி ஆட்டத்தின் தொடக்கத்தில் ஹசல் வுட் பந்தி தங்களது விக்கெட்டினை இழந்தனர். ஆனால் அதன் பின்னர் வந்த மிட்ஷெல், ரச்சின் ரவீந்திரா அணியை சிறப்பான நிலைக்கு கொண்டு சென்றனர். அரைசதம் கடந்த நிலையில் மிட்ஷெல் தனது விக்கெட்டினை இழக்க, அதைத் தொடர்ந்து சுமார் 5 ஓவர்கள் போட்டி ஆஸ்திரேலியா கட்டிப்பாட்டில் இருந்தது.
நிதானமாகவே ஆடி வந்த ரச்சின் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்த பின்னர் அதிரடியாக சிக்ஸர்கள் விளாசி சதத்தினை எட்டினார். இவரை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா கேப்டன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகப் போனது. ஒரு கட்டத்தில் பேட் கம்மின்ஸே பந்து வீசி ரச்சின் விக்கெட்டினை கைப்பற்றினார். ரச்சின் 89 பந்தில் 116 ரன்கள் சேர்த்த நிலையில் சிக்ஸர் விளாச முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்தார்.
அதன் பின்னர் இணைந்த சாண்ட்னர் மற்றும் நீஷம் கூட்டணி நியூசிலாந்துக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினர். இதில் சாண்ட்னர் தனது விக்கெட்டினை முதலில் இழக்க, பொறுப்பு முழுவதும் நீஷம் மீது விழுந்தது. இதனை உணர்ந்த அவரும் தன்னால் முடிந்த முயற்சிகளை செய்து வந்தார். மிகவும் பரபரப்பாகச் சென்ற போட்டியின் கடைசி சில ஓவர்கள் போட்டியை பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
கடைசி 2 ஓவர்ககளில் நியூசிலாந்து வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. 49வது ஓவரின் இரண்டாவது பந்தினை சிக்ஸர் விளாச முயற்சி செய்து நீஷம் அடித்த பந்தை லபுசேன் கேட்சினை பிடித்துவிட்டு எல்லைக் கோட்டினை மிதித்ததால் போட்டியில் சுவாரஸ்யம் கூடியது. அதிரடியாக ஆடிய நீஷம் 33 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார். கடைசி ஓவரில் நீஷம் தனது விக்கெட்டினை இழக்க போட்டி கடைசி பந்தில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக முடிந்தது. இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 383 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.