ரூ.1,000 கோடி யாருக்கு சென்றது என சொன்னால்தான் அமலாக்கத்துறைக்கும் மதிப்பு இருக்கும் - கிருஷ்ணசாமி
தமிழ்நாட்டில் தி.மு.க.வோ, அதி.மு.க.வோ இனிமேல் ஒற்றைகட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது புதிய தமிழகம் கட்சியின் கொள்கை நிலைப்பாடு.

டாஸ்மாக் ஊழல் குறித்து அமலாக்கத்துறை முறையாக விசாரித்து, ரூ.1000 கோடி யாருக்கு சென்றது என்பது குறித்து சொன்னால்தான், அமலாக்கத்துறைக்கும் மதிப்பு இருக்கும் என கரூரில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி பேட்டியளித்தார்.
கரூர் மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் 3% இட ஒதுக்கீடு மூலம் தேவேந்திர குல வேளாளர்களின் பறிக்கப்பட்ட உரிமை மீட்பு கருத்தரங்கம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோவை சாலையில் உள்ள தனியார் விடுதி கூட்டரங்கில் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனை தொடர்ந்து தொண்டர்களிடம் பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்தார். இதில் அக்கட்சியை சார்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, “நல்ல கல்வி, தரமான கல்வி NCRT பாட திட்டத்தின்படி சிபிஎஸ்சி திட்டத்தின் கீழ்தான் அனைத்து போட்டி தேர்வுகள் நடைபெறுகிறது. அது தமிழ்நாட்டில் வேண்டாம் என்று சொல்வது என்ன மனநிலை. தமிழகத்தில் உள்ள அரசியல் வாரிசுகள் சிபிஎஸ்சி பள்ளியில் படிக்க வைத்து விட்டு, சாதாரண குழந்தைகளுக்கு அதை கிடைக்காமல் செய்வது என்ன நியாயம் இருக்கிறது.
தாய்மொழி, ஆங்கிலம் இருக்கும்போது, இந்தி எங்கு திணிக்கப்படுகிறது. 60 ஆண்டுக்கு முன்பு இருந்த இந்தி எதிர்ப்பை இப்போது திமுக சொல்வது நியாயமில்லை. அவர்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதே போன்று திமுக செயல்பட்டால் தமிழகத்தில் 2026 தேர்தலில் ஓட்டு கேட்க போக முடியாது.
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி அனைத்து கிராமங்களிலும் வலுப்படுத்துவது குறித்தும், கட்சியின் 7-வது மாநில மாநாட்டை மதுரையில் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் பிரமாண்டமாக நடத்துவது குறித்தும் ஆலோசனை கூட்டம் மாவட்டந் தோறும் நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் ஊழல் குறித்து அமலாக்கத்துறை முறையாக விசாரித்து, ரூ.1,000 கோடி யாருக்கு சென்றது என்பது குறித்து சொன்னால்தான், அமலாக்கத்துறைக்கும் மதிப்பு இருக்கும். தமிழகத்தில் இந்தி திணிக்கவில்லை. தமிழகத்தில் தேசியக்கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் தி.மு.க.வோ, அதி.மு.க.வோ இனிமேல் ஒற்றைகட்சி ஆட்சி முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது புதிய தமிழகம் கட்சியின் கொள்கை நிலைப்பாடு. 2026-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். வெறும் கூட்டணி இல்லாமல் ஆட்சி அதிகாரத்தில் அமைச்சரவையில் பங்குபெற கூடிய வகையில் தேர்தலுக்கு முன்பாகவே குறைந்தபட்ச அம்ச திட்டத்தோடு கூட்டணியை முன்னெடுத்து செல்வதுதான் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு. தொகுதி மறுவரையறை செய்வதால் தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை” என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

