Asia Cup 2023: ஆசியக்கோப்பை பாகிஸ்தானில் நடைபெறுமா? இந்தியா கலந்துகொள்ளுமா? மார்ச்சில் முடிவு தெரியும்!
Asia Cup 2023 Host: இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவதற்காக பல முயற்சிகள் பல மாதங்களாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு பஹ்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் ஒரு கூட்டத்தை கூட்டியது.
பஹ்ரைனில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) கூட்டத்தில் பேச்சுவார்த்தை முடிவை எட்டத் தவறியதை அடுத்து, 2023 ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் நடத்துமா என்பது குறித்த இறுதி முடிவு மார்ச் மாதம் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாத கால இடைவெளியில் மீண்டும் சந்திப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஆசியக்கோப்பை பஞ்சாயத்து
2023 ஆசிய கோப்பை பற்றிய சர்ச்சை நிலை அக்டோபரில் தொடங்கியது, ACC தலைவர் மற்றும் பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, இந்தியா பாகிஸ்தானுக்கு பயணிக்க முடியாது என்பதால் இது நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று கூறினார். பின்னர் பாகிஸ்தானில் நடைபெற்றால் அரசியல் சூழல் காரணமாக இந்திய அணி செல்ல அனுமதி கிடைக்காது. செல்ல முடியாது என்றார். அதனை தொடர்ந்து அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் ரமீஸ் ராஜா இந்தியா ஆசியகோப்பைக்கு வரவில்லை என்றால், பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைக்கு இந்தியா வராது என்று மிரட்டினார். இந்தியா பாகிஸ்தான் போட்டி இல்லை என்றால் யார் தொடரைப் பார்ப்பார்கள், பெரும் நஷ்டம் ஏற்படும் என்றார். இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவதற்காக பல முயற்சிகள் பல மாதங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் முடிவு எட்டிய பாடில்லை. அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இருதினம் முன்பு பஹ்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் ஒரு கூட்டத்தை கூட்டியது.
மார்ச் மாதம்தான் முடிவு தெரியும்
அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஆசிய கிரிக்கெட் போர்டு தகைவர் ஜெய் ஷா அழைக்கப்பட்டிருந்தார். அந்த கூட்டத்தில் இது குறித்த முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில், இன்னும் முடிவடையவில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மீண்டும் இந்த கூட்டம் மார்ச் மாதம் கூடும் எனவும் அப்போதுதான் எங்கு நடக்கும் என்று அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. ஆசியக் கோப்பை, 2023 உலகக் கோப்பை அல்லது 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் பாகிஸ்தான் கலந்துகொள்ளுமா என்பது குறித்த பிசிபி முடிவுகளும், மார்ச் மாத கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பின் தான் தீர்மானிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
அரசாங்க நிலைபாடுகளுக்கு முக்கியத்துவம்
மார்ச் மாதத்தில் ஐசிசி மற்றும் ஏசிசி கூட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதன் முடிவுகளை பாகிஸ்தான் அரசாங்கத்தின் கைகளில் விடும் என்று தெரிகிறது. கூடுதலாக, அனைத்து ACC உறுப்பினர்களும் தங்கள் அணிகள் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யலாமா என்பது குறித்து தங்கள் சொந்த அரசாங்கத்தின் நிலைப்பாடுகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் ACC போட்டிகளில் ஜப்பான் மற்றும் இந்தோனேஷியா அணிகளைச் சேர்ப்பதற்கு ACC நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது, மேலும் 2023 மற்றும் 2024 நிதியாண்டுகளுக்கான ACC இன் செயல்பாடுகளின் காலெண்டரை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - பாகிஸ்தான்
2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து பல வருடங்களாக தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான், கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்து நடத்தத் திரும்பியுள்ளது, கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினர்களும் (இந்தியாவைத் தவிர) கிரிக்கெட் விளையாட அந்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உரசல்களின் விளைவாக பல ஆண்டுகளாக பாகிஸ்தான்-இந்தியா உறவுகள் மோசமடைந்துள்ளன. 2012-13ல் பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஒருநாள் தொடரில் இருந்து, அதன் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு தொடரில் விளையாடவில்லை. இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிகள் ஐசிசி மற்றும் ஏசிசி நிகழ்வுகளில் மட்டுமே காணப்படுகின்றன. இந்திய ஆண்கள் அணி 2008 முதல் பாகிஸ்தானில் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை என்றாலும், பாகிஸ்தான் கடைசியாக 2016 டி20 உலகக் கோப்பைக்காக இந்தியாவுக்கு வந்தது.