Palani Kumbabishekam : பழனி கோவில் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் 2500 போலீசார்
சிறப்பு வாய்ந்த பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு முருகப்பெருமான் மலை மீது தண்டாயுதபாணியாக காட்சி அளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவிலின் மூலவர் சிலை பதினெண் சித்தர்களில் ஒருவரான போகரால் நவபாஷாணத்தால் செய்யப்பட்டது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால் பழனி முருகனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.
சிறப்பு வாய்ந்த பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால் பழனி முருகன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. அதையடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்று பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களாகவே கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் கடந்த டிசம்பர் மாதம் கோவில் மற்றும் அறங்காவலர் குழு சார்பில் கும்பாபிஷேக தேதிஅறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 25-ந்தேதி பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்துக்கான முகூர்த்தக்கால்கள் நடப்பட்டன. கடந்த 18-ந்தேதி பூர்வாங்க பூஜைகள், ராஜகோபுரம் மற்றும் உபசன்னதி கோபுரங்களில் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டது. பின்னர் 21-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கஜ, பரி, ஆநிரை பூஜைகள் நடந்தன.
மேலும் மிராஸ் பண்டாரத்தார், அர்ச்சகர்கள் சார்பில் சண்முகநதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி கும்பாபிஷேக யாகசாலை பூஜைக்கு சூரியக்கதிரில் இருந்து அக்னி எடுத்தல், யாகசாலையில் இடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் அனைத்து தெய்வ சன்னதிகளிலும் அருட்சக்தியை கலசத்தில் கொணர்தல், சக்தி கலசங்கள் யாகசாலைக்கு புறப்பாடாகி முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து தினமும் 2 கால யாகபூஜைகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நேற்று காலை 9 மணிக்கு 4-ம் கால யாகபூஜைகள் தொடங்கின. அப்போது மங்கல இசை, விநாயகர் பூஜை, கலசபூஜை நடந்தது. மேலும் முற்றோதுதல், கந்தபுராணம், திருப்புகழ் ஆகியவை பாடப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மூலிகை பொருட்கள், வாசனை திரவியங்கள், தேன், நெய் மற்றும் இலை தண்டு, வேர் என பல்வேறு பொருட்களால் சிறப்பு யாகம், தீபாராதனை நடந்தது. அதையடுத்து கட்டியம், கந்தபுராணம், கந்தர் கலிவெண்பா ஆகியவை பாடப்பட்டது.
பின்னர் மாலை 5.30 மணிக்கு 5-ம் கால யாகபூஜைகள் தொடங்கியது. அப்போது ஐந்திருக்கை ஐந்து சுற்று பூஜை, மூலிகை பொருட்களால் சிறப்பு யாகம், பட்டாடை ஆகுதி நடைபெற்று கட்டியம், கந்தபுராணம், முருகன் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டது. இதற்கிடையே பழனி அடிவாரம் பாதவிநாயகர் கோவில், இடும்பன், கடம்பன் என படிப்பாதையில் உள்ள அனைத்து உபசன்னதி தெய்வங்களுக்கான யாகம் இன்று நிறைவு பெறுகிறது. பின்னர் கலச புறப்பாடு நடைபெற்று 9.50 மணிக்கு மேல் 11 மணிக்குள் சன்னதி கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் மலைக்கோவிலில் இன்று காலை 6-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5.30 மணிக்கு 7-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது.
தொடர்ந்து நாளை வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. அப்போது மங்கல இசை, முதல்நிலை வழிபாடு, விநாயகர் பூஜை, கலச பூஜை, பன்னிரு திருமுறை ஓதுதல், சந்திரன் வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து மூலிகை பொருட்கள், அறுசுவை சோறு, வாசனை திரவியங்கள், பச்சை கற்பூரம், சந்தன கட்டை, அகில்கட்டை, பழரசங்கள் என 96 வகை பொருட்களை கொண்டு சிறப்பு யாகம் நடக்கிறது.
பின்னர் காலை 7.15 மணிக்கு பெருநிறை வேள்வி, தீபாராதனை, கட்டியம், கந்தபுராணம், பன்னிரு திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து கும்பாபிஷேக லக்ன கொடை அளித்தல் நடக்கிறது. அதையடுத்து 8.15 மணிக்கு மங்கல இசையுடன் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து தேவாரம் பன்னிசை, திருப்புகழ் பாடப்படுகிறது. அதைத்தொடர்ந்து விண்ணவர் கூடி துதி செய்யும் வாழ்த்து ஒலி முழங்கிட தண்டாயுதபாணி சுவாமியின் ராஜகோபுரம், தங்கவிமானத்தில் உள்ள கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதன்பிறகு 8.45 மணிக்கு மலைக்கோவிலில் உள்ள தெய்வங்களின் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் மதியம் 12.05 மணிக்கு அன்னப்படையல், தீபாராதனை, திருமறை, சிவஆகமம், கட்டியம், கந்தபுராணம், திருமுறை விண்ணப்பம் பாடப்படுகிறது. 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனியில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போலீஸ் சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2 ஐ.ஜி.க்கள், 2 டி.ஐ.ஜி.க்கள், 7 காவல் கண்காணிப்பாளர்கள், 14 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 25 காவல் துணை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 2,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்களுக்கு உதவிடும் வகையில் அடிவாரம், கிரிவீதி, சன்னதி வீதி, பஸ்நிலையம் என அனைத்து பகுதிகளிலும் போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் அடிவாரம் போலீஸ் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பும் செய்யப்பட உள்ளது.