அமைதிக்கான நோபல் பரிசு.. அகதிகள் நலனுக்காக ஏலம்.. யார் இந்த பத்திரிகையாளர் டிமிட்ரி மொரடோவ்?
பரிசை ஏலத்தில்விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு உக்ரைன் அகதிகளுக்கு உதவப்போவதாகக் கூறியுள்ளார்.
கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க தைரியமான போராட்டத்தை முன்னெடுத்தமைக்காக அமைத்திக்கான நோபல் பரிசை வெற்ற ரஷ்யாவின் டிமிட்ரி மொரடோவ், தற்போது அந்தப் பரிசை ஏலத்தில்விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு உக்ரைன் அகதிகளுக்கு உதவப்போவதாகக் கூறியுள்ளார்.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். அதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி மொரடோவ்ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க தைரியமான போராட்டத்தை முன்னெடுத்த பிலிப்பைன்ஸ்யைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸாவுக்கும், ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவுக்கும் விருது பகிர்ந்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட அந்தப் பரிசை ஏலம் விட்டு உக்ரைன் அகதிகளுக்கு நிதி திரட்டப்போவதாக அறிவித்துள்ளார் டிமிட்ரி மொரடோவ்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒரு மாதம் காலம் எட்டவுள்ளது. இந்நிலையில் ரஷ்யா கடந்த மார்ச் 5ல் ஒரு புதிய சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டத்தின்படி ரஷ்ய நடவடிக்கை குறித்து போலி செய்திகள் வெளியிட்டால் 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, கடுமையான அபராதங்களை சந்திக்கக் கூடும். இந்தச் சட்டத்தின் நோக்கம் ரஷ்ய வீரர்களை, ரஷ்ய ராணுவ அதிகாரிகளைப் பாதுகாப்பது. உண்மையைப் பாதுகாப்பது என்று ரஷ்ய நாடாளுமன்றம் தெரிவித்தது. இது தனிநபர், செய்தி ஊடகங்கள் என அனைவருக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டது.
அப்போது, ரஷ்யாவின் நோவயா கஸட்டா செய்தித்தாளின் எடிட்டர் டிமிட்ரி மொரடோவ் தங்கள் செய்தித்தாளில் இனி உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை பற்றிய செய்திகள் வராது என்று அறிவித்தார். சென்சார் விதிகள் கடுமையாக இருப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக துணிச்சலுடன் கூறினார்.
இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலால் அங்கிருந்து ஒரு கோடிக்கும் அதிகமானோர் அண்டை நாடுகளில் குடியேறியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிலான அகதிகள் வெளியேற்றம் இதுவென்று ஐ.நா. சபையே கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அகதிகள் நலனுக்காக நோபல் பரிசை ஏலத்தில்விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு உதவிகளைச் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை அறிவித்தார். இதுவரை உக்ரைனில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், ஏன் தாலிபான்களின் கண்டனம் வரை ரஷ்யா மீது பதிந்தும் கூட ராணுவ நடவடிக்கை தொடரும் என்பதில் புதின் உறுதியாக இருக்கிறார்.