’புர்கா எல்லாம் போட முடியாது!’ - தலிபானுக்கு எதிராக ஆன்லைன் புரட்சியில் ஆஃப்கான் பெண்கள்!
தலிபான்களுக்கு பதிலடி தரும் வகையில் தங்களுக்குப் பிடித்த வண்ண வண்ண உடைகளை உடுத்தி போட்டோ ஷூட் செய்து அதனை ஆன்லைனில் பதிவேற்றி வருகின்றனர்.
ஆஃப்கானிஸ்தான் பெண்கள் புர்கா அணிந்துதான் வெளியே வரவேண்டும் என்கிற தலிபான்களின் கட்டளைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர் அந்த நாட்டுப் பெண்கள். தலிபான்களுக்கு பதிலடி தரும் வகையில் தங்களுக்குப் பிடித்த வண்ண வண்ண உடைகளை உடுத்தி போட்டோ ஷூட் செய்து அதனை ஆன்லைனில் பதிவேற்றி வருகின்றனர்.
இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் #DoNotTouchMyClothes #AfghanCulture ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. கடந்த சனிக்கிழமை அன்று காபூல் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்திருந்த தலிபான்கள் பெண்கள் தலையிலிருந்து கால்கள் வரை புர்கா அணிவது குறித்து பரப்புரை மேற்கொண்டனர். மேலும் இந்தக் கொள்கையை பெண்கள் பின்பற்றவேண்டும் என தலிபான்கள் உறுதிமொழி எடுக்கச் சொன்னார்கள். மற்றொருபக்கம் இதுகுறித்தப் பேரணியும் நடத்தப்பட்டது. இதற்கு எதிராகத் திரண்ட ஆஃப்கான் பெண்கள் அந்த கொள்கைகள் தங்களுக்குப் பொருந்தாது என்றும் ஆஃப்கானிஸ்தானில் பெண்களின் பாரம்பரிய உடை புர்கா இல்லை என்றும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒருபக்கமாக ஆஃப்கானிஸ்தானின் பாரம்பரிய உடை அணிந்து எடுத்த ஃபோட்டோ ஷூட்களை ஆன்லைனில் பகிர்ந்து வருகிறார்கள்.
View this post on Instagram
முன்னதாக ஆஃப்கானிஸ்தானில் பெண்களை ஒடுக்கும் விதமாகப் பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கே பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் ஆண்களும் பெண்களும் வகுப்பறைகளில் தனித்தனியே அமரவைக்கப்பட்டு இடையே திறைச்சீலை போடப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பெண்களுக்கு ஆண் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தவிர தலிபான்கள் புதிதாக அறிவித்துள்ள ஆட்சியில் பெண்களே இல்லாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் உட்பட பலரும் குரல் கொடுத்துள்ள நிலையில் தலிபான் செய்தித்தொடர்பாளர் செகருல்லா பெண்களுக்குத் தலைமைப் பொறுப்பு தேவையில்லை என்றும் பிள்ளைபெற்றுத் தருவதுதான் அவர்களது வேலை என்றும் பேசியிருந்தார். இதுவும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலிபான்கள் ஆட்சியில் தொடர்ந்து பெண்கள் ஒடுக்கப்பட்டு வருவது அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.