தஞ்சம் தேடிச்சென்ற மக்கள்; நடுக்கடலில் படகு மூழ்கியதால் 28 பேர் உயிரிழப்பு, 60 பேர் மாயம் - நடந்தது என்ன?
துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 28 பேர் படகு கடலில் மூழ்கியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று துனிசியா ஆகும். அல்ஜீரியா, லிபியா ஆகிய நாடுகளை அண்டை நாடுகளாக கொண்டுள்ளது துனிசியா. பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நாடு லிபியா. போர், பொருளாதார நெருக்கடி, வறுமை என்று பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது லிபியா.
28 பேர் உயிரிழப்பு
இதனால், லிபியா நாட்டைச் சேர்ந்த பலரும் ஐரோப்ப நாடுகளுக்குள் தஞ்சம் அடைகின்றனர். அதற்காக லிபியாவைச் சேர்ந்தவர்கள் அண்டை நாடான துனிசியாவில் இருந்தே மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலிக்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய தரைக்கடல் வழியாக துனிசியாவில் இருந்து கடந்த சனிக்கிழமை இத்தாலிக்கு படகு ஒன்றில் சட்டவிரோதமாக ஏராளமானோர் புலம்பெயர்ந்த மக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த படகு திடீரென கடலில் மூழ்கியது. இதில் படகில் சென்று கொண்டிருந்த 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
60 பேர் மாயம்:
உயிரிழந்த நபர்கள் சென்ற படகில் இருந்து இதுவரை 19 பெண்கள் மற்றும் 9 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த படகில் சென்ற சுமார் 60 பேருக்கும் மேல் இதுவரை காணவில்லை. துனிசியா நாட்டின் வழியாக புலம்பெயர்து வரும் மக்கள் பெரும்பாலும் இத்தாலிக்கு மிக அருகில் உள்ள தீவான லம்பெடுசா தீவிற்குள் அடைக்கலம் அடைகின்றனர். இத்தாலி கடற்படை இந்த சம்பவம் தொடர்பாக கூறியிருப்பதாவது, கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 58 படகுகளில் 3 ஆயிரத்து 300 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மக்களை சட்டவிரோதமாக இத்தாலிக்குள் அழைத்து சென்ற குற்றச்சாட்டிற்காக மீன்பிடி படகு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அந்த மீன்பிடி படகிற்கு சொந்தமான அறக்கட்டளை இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயார் என்று தெரிவித்துள்ளது.
12 ஆயிரம் பேர் தஞ்சம்:
ஐ.நா. அளித்துள்ள அறிக்கையின்படி துனிசியாவில் இருந்து நடப்பாண்டில் இதுவரை 12 ஆயிரம் பேர் வரை புலம்பெயர்ந்துள்ளனர். கடந்தாண்டு இந்த காலகட்டத்தில் 1300 பேர் மட்டுமே பங்கேற்றனர். துனிசியா கடலோர காவல்படை நடப்பாண்டில் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை படகு மூலம் புலம்பெயர்ந்து செல்வதை தடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் இந்த காலகட்டத்தில் இது வெறும் 2 ஆயிரத்து 900 ஆக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : இந்திய வம்சாவளி சிறுமி கொலை...100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்..!
மேலும் படிக்க: கடவுள் குறித்து அவமதிக்கும் கருத்துகளா? விக்கிப்பீடியா மீதான தடையை திரும்பப்பெற்ற பாகிஸ்தான்...நடந்தது என்ன?