கடவுள் குறித்து அவமதிக்கும் கருத்துகளா? விக்கிப்பீடியா மீதான தடையை திரும்பப்பெற்ற பாகிஸ்தான்...நடந்தது என்ன?
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று பிறப்பித்த உத்தரவின்பேரில் நாட்டின் தொலை தொடர்பு கட்டுப்பாட்டாளர் அமைப்பு வீக்கிப்பீடியா மீதான தடையை விலக்கியுள்ளது.
பாகிஸ்தானை பொறுத்தவரையில் கடவுளை அவமதிக்கும் கருத்துகளை தெரிவிப்பது சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. பாகிஸ்தானில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மத நிந்தனை குற்றச்சாட்டில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் குற்றம்சாட்டப்பட்டவரின் குடும்ப உறுப்பினர், அவர்களின் வழக்கறிஞர், வழக்கை விசாரித்த நீதிபதியும் அடங்குவர்.
இந்நிலையில், கடவுள் குறித்து அவமதிக்கும் கருத்துகள் இடம்பெற்றதாக கூறி, பாகிஸ்தானில் விக்கிப்பீடியா முடக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது திரும்பப்பெற்றுள்ளது.
தடையை விலக்கியதற்கு விக்கிப்பீடியாவை இயக்கும் விக்கிமீடியா பவுண்டேஷன் நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது. "இந்தத் தடையை நீக்கி இருப்பதால் பாகிஸ்தான் மக்கள் தொடர்ந்து பயனடைவார்கள். சரிபார்க்கப்பட்ட, நம்பகமான மற்றும் இலவசமான அறிவைப் பரப்பும் பகிர்ந்துகொள்ளும் முயற்சியில் பாகிஸ்தான் மக்கள் பங்கு கொள்ள முடியும்" என வீக்கிமீடியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று பிறப்பித்த உத்தரவின்பேரில் நாட்டின் தொலை தொடர்பு கட்டுப்பாட்டாளர் அமைப்பு வீக்கிப்பீடியா மீதான தடையை விலக்கியுள்ளது.
Prime Minister @CMShehbaz has directed that the Wikipedia website be restored with immediate effect. The Prime Minister has also constituted a Cabinet Committee on matters related to Wikipedia and other online content. pic.twitter.com/fgMj5sqTun
— Marriyum Aurangzeb (@Marriyum_A) February 6, 2023
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "சில ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தினை கட்டுப்படுத்த, தளத்திற்கு முழுவதுமாகத் தடை விதிப்பது பொருத்தமான நடவடிக்கை அல்ல" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலக அறிக்கையை ட்விட்டரில் பகிர்ந்த தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மரியும் ஔரங்கசீப், "இணையதளத்தை தடை செய்யும் முடிவையும், பிற ஆன்லைன் உள்ளடக்கம் தொடர்பான விஷயங்களையும் மதிப்பாய்வு செய்ய அரசாங்கத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழு, நாட்டின் சமூக கலாசார மற்றும் மத உணர்வுகளை கருத்தில் கொண்டு, விக்கிப்பீடியா அல்லது பிற ஆன்லைன் தகவல் தளங்களில் உள்ள ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை கையாள்வதற்கான மாற்று தொழில்நுட்ப நடவடிக்கைகளை ஆராய்ந்து அதனை பரிந்துரைக்கும்.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, கடவுள் நிந்தனை கருத்துகள் இடம்பெற்றதாகக் கூறி விக்கிப்பீடியா மீது தடை விதிக்கப்பட்டது. குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கக் கோரி 48 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், சர்ச்சைக்குரிய கருத்துகள் நீக்கப்படவில்லை. இதையடுத்து, தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பாகிஸ்தானில் பெரும் இணையதளங்கள் முடக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அதுமட்டும் இன்றி, ஆன்லைன் விளையாட்டுகள், சமூக வலைதள செயலிகளும் முடக்கப்பட்டுள்ளன.