இந்திய வம்சாவளி சிறுமி கொலை...100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்..!
இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 வயது சிறுமியை கொலை செய்ததற்காக 35 வயது நபருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 வயது சிறுமியை கொலை செய்ததற்காக 35 வயது நபருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு, அந்த சிறுமி கொல்லப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன?
குற்றவாளியின் பெயர் ஜோசப் லீ ஸ்மித். இவர் ஷ்ரெவ்போர்ட்டில் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம், மியா படேலை ஜோசப் கொலை செய்தது நிரூபணமானது. இதையடுத்து, அவருக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
மாங்க்ஹவுஸ் டிரைவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் மியா படேல் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரது அறைக்குள் புகுந்த புல்லட் அவரது தலையில் பாய்ந்தது. அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மூன்று நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலன் இன்றி, 2021ஆம் ஆண்டு, மார்ச் 23ஆம் தேதி அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போதுதான், பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன. சூப்பர் 8 மோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் ஸ்மித் மற்றொரு நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
வாக்குவாதத்தின் போது, ஸ்மித், அந்த நபரை 9-மிமீ கைத்துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால், தோட்டா, அவரின் மீது படாமல் விடுதியின் மற்றொரு அறையில் இருந்த மியாவின் தலையில் பட்டது.
60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை;
மியாவை கொலை செய்ததற்காக ஸ்மித்துக்கு 60 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி மாவட்ட நீதிபதி ஜான் டி மோஸ்லி உத்தரவிட்டார். இந்த காலக்கட்டத்தில், அவருக்கு எந்தவிதமான பரோலும் வழங்கக் கூடாது. தண்டனை குறைப்பும் அளிக்க முடியாது.
அதேபோல, நீதிமன்ற விசாரணையில் தலையிட்டதற்காக 20 ஆண்டுகளும் தீவிரமான குற்றத்தில் ஈடுபட்டதற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த, தண்டனை காலத்திலும் அவருக்கு எந்தவிதமான பரோலும் வழங்கக் கூடாது. தண்டனை குறைப்பும் அளிக்க முடியாது.
இதுகுறித்து கேடோ பாரிஷ் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் அதிகாரி கூறுகையில், "ஸ்மித் மீண்டும் மீண்டும் குற்றமிழைப்பதால் 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, துப்பாக்கி கலாசாரமே காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக, சமீபத்தில், பிரதிநிதிகள் சபையில் முதல் முறையாக பயங்கர ஆயுதங்களை தடை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்காவில் துப்பாக்கி சீர்திருத்தம் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. இதேபோல, 1994 இல், ரைபிள்ஸ் மற்றும் சில உயர் திறன் துப்பாக்கிகளை பயன்படுத்த 10 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் பஃபேலோவில் உள்ள பல்பொருள் அங்காடியில் 10 ஆப்பிரிக்க அமெரிக்கர்களை வெள்ளை இன வெறியர் ஒருவர் சுட்டுக் கொன்றார்.