Villupuram: மரக்கன்றுகளை காப்பாற்ற 60 அடி ஆழ கிணற்றில் நீர் எடுக்கும் கிராம மக்கள் - இந்த நிலைக்கு என்ன கரணம் ?
விழுப்புரம் அருகே திருக்குணம் கிராமத்தில் மரக்கன்றுகளை காப்பாற்ற 60 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் எடுக்கும் கிராம மக்கள்.
விழுப்புரம்: கானை அருகேயுள்ள திருக்குணம் கிராமத்தில் மீட்கப்பட்ட 12 ஏக்கர் நிலத்தில் நடவு செய்யபட்ட 12 ஆயிரம் மரக்கன்றுகளை காப்பாற்ற 60 அடி ஆழ கிணற்றில் கிராம மக்கள் இறங்கி நீர் எடுத்து செல்வதால் சொட்டு நீர் பாசன வசதி அமைத்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கானை ஊரட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருக்குணம் கிராமத்தில் தனி நபர் ஆக்கிரமித்து வைத்திருந்த 12 ஏக்கர் நிலத்தை மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் மீட்டு ஊராட்சி நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்து மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க உத்தரவிட்டனர். அந்த உத்தரவின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் 12 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அமைச்சர்கள் பொன்முடி, ஐ பெரியசாமி, செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட கிராம மக்கள் ஒரே நேரத்தில் 12 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.
மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்ட இடத்தில் நீர் மூழ்கி மோட்டார் மூலம் சொட்டு நீர் பாசன வசதி ஏற்பாடு செய்து மரக்கன்றுகளுக்கு நீர் பாசனம் செய்தாக கானை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரி கூறியிருந்தார். அதன் பின்னர் மரக்கன்றுகளுக்கு நீர் பாசனம் செய்ய சொட்டு நீர் குழாய் அமைக்காத்தால் மரக்கன்றுகள் காய்ந்தன. இதனையடுத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் மூலம் கிராம மக்களை கொண்டு 60 அடி ஆழ கிணற்றில் நீர் எடுத்து 12 ஆயிரம் மரக்கன்றுகளை காப்பாற்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆபத்தான முறையில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பெண்களை கொண்டு பிளாஸ்டிக் குடங்களில் நீர் எடுத்து சென்று மரக்கன்றுகளை காப்பாற்ற வேண்டிய சூழல் உள்ளதால் சொட்டு நீர் பாசனம் மூலம் மரக்கன்றுகளுக்கு நீர் பாசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சொட்டு நீர் பாசன வசதி செய்து தந்தால் 12 ஏக்கரில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க தயாராக உள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் 12 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு குடத்தில் நீர் எடுத்து சென்று முழுமையாக பாசனம் செய்ய முடியாததால் பல்வேறு மரக்கன்றுகள் காய்ந்து கருகுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்