Hindi Imposition: இந்திக்கு செம்மொழி அந்தஸ்து இல்லாதது ஏன்? என்ன குறை அந்த மொழியில்? தமிழுக்கு மட்டும் எப்படி?
Hindi Imposition: இந்தியாவில் பல கோடி பேர் பேசினாலும் இந்தி மொழிக்கு, செம்மொழி (Classical Language) அந்தஸ்து கிடைக்காதது ஏன் என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Hindi Imposition: செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கான சில அடிப்படைகள் இந்தி மொழிக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்மொழி சர்ச்சை:
மொழிப்போர் முடிந்து 50 ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு பிரச்னை வெடித்துள்ளது. மும்மொழிக்கொள்கையை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. எங்களுக்கான நிதியை கொடுக்காமல் நிறுத்தி வைத்தாலும் பரவாயில்லை, இந்தியை கட்டாய பாடமாக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். இதனால், மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் பெரும்பான்மையான மக்களால் இந்தி பேசப்பட்டாலும், தமிழுக்கு கிடைத்த ”செம்மொழி” அந்தஸ்து ஏன் அந்த மொழிக்கு கிடைக்கவில்லை என்ற கேள்வி பலருக்கும் எழுந்து இருக்கும். அதற்கான விடையை இங்கே அறியலாம்.
”செம்மொழி” அந்தஸ்து
இந்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு "செம்மொழி மொழிகள்" என்ற புதிய மொழி வகையை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இதுவரை, 11 மொழிகளுக்கு இந்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக தமிழ் மொழிக்கு தான் ”செம்மொழி” அந்தஸ்து வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, அசாமீஸ், பெங்காலி, மராதி, பாலி மற்றும் ப்ராக்ரித் ஆகிய மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
”செம்மொழி” அந்தஸ்திற்கான தகுதிகள்:
மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க சில அடிப்படை தகிகளை கொண்டிருக்க வேண்டும். அதன்படி,
- 1,500–2,000 ஆண்டுகள் பழமையான ஆரம்பகால நூல்கள்/பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் உயர் தொன்மையை கொண்டிருக்க வேண்டும்
- தலைமுறை தலைமுறையாக மதிப்புமிக்க பாரம்பரியமாகக் கருதப்படும் பண்டைய இலக்கியங்கள்/நூல்களின் தொகுப்பை பெற்றிருக்க வேண்டும்
- வேறொரு பேச்சு சமூகத்திலிருந்து கடன் வாங்கப்படாத அசல் இலக்கிய மரபின் இருப்பு அவசியம்
- நவீன மொழியிலிருந்து வேறுபட்டதாக இருப்பதால், பாரம்பரிய மொழிக்கும் அதன் பிற்கால வடிவங்களுக்கும் அல்லது அதன் கிளைகளுக்கும் இடையில் ஒரு தொடர்ச்சியின்மை இருக்கலாம்
மேற்குறிப்பிடப்பட்ட அனைத்தையும் பூர்த்தி செய்து மூத்த மொழியாக விளங்குவதால் தான், தமிழுக்கு முன்னுரிமை அளித்து செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
”செம்மொழி” அந்தஸ்திற்கான பலன்கள்:
- ஒரு மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டவுடன், அந்த மொழியைப் படிப்பதற்கான ஒரு சிறப்பு மையத்தை அமைப்பதற்கு நிதி உதவி பெறுகிறது.
- சிறந்த அறிஞர்களுக்கான இரண்டு முக்கிய விருதுகளுக்கான வாய்ப்பையும் திறக்கிறது.
- கூடுதலாக, மத்தியப் பல்கலைக்கழகங்கள் தொடங்கி பல்வேறு கல்வி நிறுவனங்களில் செம்மொழி அறிஞர்களுக்கான தொழில்முறை இருக்கைகளை நிறுவ பல்கலைக்கழக மானியக் குழுவைக் கோரலாம்.
இதன் மூலம் அந்த மோழி மேலும் போற்றப்பட்டு, வளர்ச்சி பெற ஊக்குவிக்கப்படும்.
இந்திக்கு ”செம்மொழி” அந்தஸ்து வழங்கப்படாதது ஏன்?
இந்தி மொழி குறிப்பிடத்தக்க இலக்கிய மரபு மற்றும் நீண்ட வரலாற்றை கொண்டிருந்தாலும், பண்டைய மற்றும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட இலக்கிய மரபுகளைக் கொண்ட தமிழ் போன்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது அது பெரும்பாலும் இளைய மொழியாகவே கருதப்படுகிறது. மேலும், இந்தி மொழியில் சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் உருது உள்ளிட்ட பல மொழிகளின் தாக்கம் காணப்படுகிறது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள தகுதிகளின்படி, செம்மொழி அந்தஸ்து பெறும் மொழியில் வேறு எந்த ஒரு மொழியின் தாக்கமும் இருக்கக் கூடாது. ஆனால், இந்தியில் ஒன்றுக்கும் மேற்பட்ட மற்ற மொழிகளின் கலப்பு உள்ளது. அதன் காரணமாக இந்தியை ”செம்மொழி”யாக அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

