Preity Zinta: "கொஞ்சமாச்சு வெட்கப்படுங்க" காங்கிரஸை கிழித்து தொங்கவிட்ட பிரபல பாலிவுட் நடிகை!
Preity Zinta loan: நியூ இந்திய கூட்டுறவு வங்கியிடம் இருந்து நடிகை ப்ரீத்தி ஜிந்தா பெற்ற கடனை பாஜக தள்ளுபடி செய்துவிட்டதாக கேரள காங்கிரஸ் சுமத்திய குற்றச்சாட்டுக்கு ப்ரீத்தி ஜிந்தா பதிலடி அளித்துள்ளார்.

Congress Preity Zinta: தன்னுடைய சமூக வலைதள பக்கங்களை பாஜகவினருக்கு கொடுத்து நியூ இந்திய கூட்டுறவு வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடனை பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா வாராக்கடனாக மாற்றிவிட்டார் என காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடனை 10 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பி செலுத்திவிட்டதாக ப்ரீத்தி ஜிந்தா பதிலடி அளித்துள்ளார்.
ப்ரீத்தி ஜிந்தா மீது பரபர குற்றச்சாட்டு:
முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி நியூ இந்தியா கூட்டுறவு வங்கியின் மீது கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி. புதிதாக கடன்களை வழங்க தடை விதித்தது. அதோடு, புதிய முதலீடுகள் மற்றும் வைப்புத்தொகைகளை ஏற்றுக்கொள்வதற்கும் அதன் சொத்துக்களை விற்பனை செய்வதற்கும் நியூ இந்தியா கூட்டுறவு வங்கி மீது தடை விதிக்கப்பட்டது. இதனால், வங்கி பயனாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நடிகை ப்ரீத்தி ஜிந்தா பெற்ற கடனை நியூ இந்திய கூட்டுறவு வங்கி வாராக்கடனாக ( திருப்பி பெற முடியாத கடன்) அறிவித்துவிட்டதாக செய்தி வெளியானது. இந்த செய்தியை எக்ஸ் பக்கத்தில் கேரள காங்கிரஸ் பகிர்ந்தது.
அதில், "அவர் (ப்ரீத்தி ஜிந்தா) தனது சமூக ஊடகக் கணக்குகளை பாஜகவுக்குக் கொடுத்து தான் அளிக்க வேண்டிய 18 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய வைத்தார். கடந்த வாரம்தான், அந்த வங்கி திவாலானது. வைப்புத்தொகையாளர்கள் தங்கள் பணத்திற்காக தெருக்களில் இறங்கியுள்ளனர்" என கேரள காங்கிரஸ் சாடியிருந்தது.
பொய் செய்தி வெளியிட்டதா கேரள காங்கிரஸ்?
இதற்கு பதிலடி அளித்த ப்ரீத்தி ஜிந்தா, "இல்லை. என்னுடைய சமூக ஊடகக் கணக்குகளை நானேதான் இயக்குகிறேன். போலிச் செய்திகளை விளம்பரப்படுத்தியதற்காக உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். யாரும் எனக்காக எதையும் அல்லது எந்தக் கடனையும் தள்ளுபடி செய்யவில்லை.
ஒரு அரசியல் கட்சியோ அல்லது அவர்களின் பிரதிநிதியோ போலிச் செய்திகளை விளம்பரப்படுத்துவதும், என் பெயர் மற்றும் படங்களைப் பயன்படுத்தி மோசமான வதந்திகள் மற்றும் விளம்பரங்களில் ஈடுபடுவதும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
No I operate my social media accounts my self and shame on you for promoting FAKE NEWS ! No one wrote off anything or any loan for me. I’m shocked that a political party or their representative is promoting fake news & indulging in vile gossip & click baits using my name &… https://t.co/cdnEvqnkYx
— Preity G Zinta (@realpreityzinta) February 25, 2025
10 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கிய கடனை முழுமையாக திருப்பிச் செலுத்திவிட்டேன். இது தெளிவுபடுத்தி, எதிர்காலத்தில் எந்த தவறான புரிதல்களும் ஏற்படாமல் இருக்க உதவும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

