மூன்றாவது மொழி கட்டாயம் - கவிஞர் வைரமுத்துவின் கருத்து என்ன?
மூன்றாவது மொழியை கட்டாயப்படுத்துவதை தமிழர்கள் ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், மொழி திணிப்பாகவே கருதுவார்கள் எங்களுக்கு மொழி திணிப்பு வேண்டாம் - கவிஞர் வைரமுத்து

அரபு உருது துறை சார்பில் கருத்தரங்கம்
சென்னை காமராஜர் சாலையில் உள்ள சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் அரபு பாரசீகம் மற்றும் உருது துறை சார்பில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து விழா மேடையில் பேசிய வைரமுத்து
உலகில் எதிர் காலத்தில் பல மொழிகள் அழிந்து போக கூடிய நிலை உள்ளது , தமிழ் மொழி எங்கள் உயிர் மொழி, அதனை நாங்கள் அழிய விட மாட்டோம் எந்த விலை கொடுத்தும் எங்கள் மொழியை நாங்கள் பாதுகாப்போம், எங்கள் நிலத்தை அதிகாரத்தை விட மாட்டோம் என்று பேசினார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து
ஒன்றிய அரசின் மீது தமிழ்நாட்டு மக்கள் சினம் கொண்டு உள்ளனர் , எந்த மொழி மீதும் தமிழனுக்கு வெறுப்பு இல்லை எந்த ஒரு மொழி மீதும் தமிழனுக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை, தமிழை விட சிறந்த மொழி இருக்கிறது என்று சொன்னால் கூட தமிழர்கள் ஒத்துக் கொள்வார்கள், எந்த ஒரு மொழியையும் தமிழின் பாரம்பரியத்தின் மீது திணிப்பதாக இருந்தால் கடைக்கோடி தமிழர் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்.
அண்ணா சொன்னதுதான் எங்களுக்கு ஏற்றது
திணிப்பு என்பது தான் மொழி வரலாற்றில் மோசமான வார்த்தையாக கருதப்படுகிறது. ஒரு குழந்தை கூட பாலை திணித்தால் துப்பி விடுகிறது , மொழியை திணித்தால் ஒரு இனம் ஏற்றுக் கொள்ளுமா என்று கேள்வி எழுப்பிய அவர் அண்ணா சொன்ன இரு மொழி கொள்கை தான் எங்களுக்கு ஏற்றது தமிழர்களுக்கு உகந்தது.
இருமொழி கொள்கையில் படித்தவர்கள் தான் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்கள், ஆங்கிலம் தமிழை கற்றுக் கொண்ட மாணவர்கள் நாசாவிலிருந்து உலக நிறுவனங்களில் ஆண்டு கொண்டிருக்கிறார்கள், மூன்றாம் மொழி திணிப்பை தமிழர்கள் ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

