ஏரியில் தாமரைப்பூ பறிக்க சென்ற தம்பதி சடலமாக மீட்பு - விழுப்புரத்தில் சோகம்
விழுப்புரம் அருகே ஏரியில் தாமரைப்பூ பறிக்க சென்ற தம்பதி சடலமாக மீட்பு.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தொரவி கிராமம் காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவர் கோவில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். கண்ணன் நேற்று இரவு இவர் தனது மனைவி பிரேமாவுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து உறவினர்கள் விக்கரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி இரண்டு பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் தொரவி ஏரி நீரில் இரண்டு உடல்கள் மிதப்பதாக விக்கிரவாண்டி காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விக்கிரவாண்டி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அந்த உடல்களை மீட்டு பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் காணாமல் போன கண்ணன் மற்றும் அவரது மனைவி பிரேமா என தெரியவந்தது. விசாரணையில் ஏரியில் தாமரைப்பூ பறிக்க சென்ற பொழுது ஆழமான பகுதி தெரியாமல் இறங்கியதில் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த கண்ணனுக்கு பிரதிக்க்ஷா (8) என்ற மகள் உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.