பங்கைப் பிரி.. பங்கைப் பிரி..! அதிமுக-விடம் பாஜக கேட்கும் தொகுதிகள் இத்தனையா? பிடிகொடுப்பாரா இபிஎஸ்?
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக பாஜக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக தொடங்கியுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க திமுக தீவிரமாக பணியாற்றி வரும் சூழலில், இழந்த ஆட்சியைப் பிடிக்க அதிமுக தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக - பாஜக கூட்டணி:
அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக, தமாக, அமமுக ஆகிய கட்சிகள் இடம்பிடித்துள்ளன. இதில் பெரிய கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதமே உள்ள நிலையில், அதிமுக-வுடன் பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
35 தொகுதிகள்:
கூட்டணியில் இன்னும் பெரிய கட்சிகளை உள்ளே கொண்டு வர எடப்பாடியார் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், பாஜக அதிமுகவிடம் வரும் சட்டமன்ற தேர்தலில் 35 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபடச் சென்றபாேது, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து அளித்தார்.

அந்த விருந்தின்போது எடப்பாடி பழனிசாமியிடம் நயினார் நாகேந்திரன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசியுள்ளார். ஆனால், அப்போது பாஜக-வின் கூட்டணி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்காமல் இருந்துள்ளார். நெல்லையில் நயினார் நாகேந்திரனும் எடப்பாடி பழனிசாமியும் தனியாக ஆலோசனை நடத்தியபோது இதுதொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
விரைவில் சென்னை வரும் பாஜக தலைமை:
இந்த நிலையில், கடந்த வாரம் சென்னை வந்த பாஜக தேசிய அமைப்பு பாெதுச்செயலாளர் பிஎல் சந்தோஷிடம் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர் மீண்டும் சென்னைக்கு விரைவில் வர உள்ளார். அப்போது, அதிகாரப்பூர்வமாக தாெகுதிப் பங்கீட்டை பாஜக அதிமுக-வுடன் நடத்த திட்டமிட்டுள்ளனர். அப்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-விடம் 35 தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக-விற்கு 20 தொகுதிகளை எடப்பாடி பழனிசாமி ஒதுக்கினார். ஆனால், அப்போதே பாஜக-விற்கு 20 தொகுதிகளை ஒதுக்கியதற்கு கட்சிக்குள் கண்டனம் எழுந்தது. பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இந்த முறை வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என்று பாஜக கூறி அதிமுக-விற்கு தலைவலியை பாஜக தலைமை ஏற்படுத்தி வரும் நிலையில், 35 தொகுதிகளை அதிமுக தருவதற்கு நிச்சயம் விரும்பாது என்றே கருதப்படுகிறது.
ஒப்புக்கொள்வாரா எடப்பாடி?

விரைவில் சென்னை வரும் பிஎல் சந்தோசுடன் இதுதொடர்பாக அதிமுக தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போதுள்ள தகவலின்படி பாஜகவிற்கு 35 தாெகுதிகளை அதிமுக வழங்காது என்றே கூறப்படுகிறது. மறுமுனையில் பாமக-வையும் கூட்டணிக்குள் அதிகாரப்பூர்வமாக கொண்டு வர எடப்பாடி பழனிசாமியார் தீவிரம் காட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பாஜக-வை கழட்டிவிட்டு விஜய்யின் தவெக-வுடன் கைகோர்க்க வேண்டும் என்று தொடர்ந்து அதிமுக-வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.





















