AK 64: தெறிக்க விடலாமா... அஜித்தின் அடுத்த படம் எப்படி இருக்கும்? செம அப்டேட் தந்த ஆதிக் ரவிச்சந்திரன்!
அஜித்குமார் நடிக்கும் அவரது 64வது படம் எப்படி இருக்கும்? என்று படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். ரஜினி, விஜய் போன்று தனக்கென்று கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் நடிப்பில் கடைசியாக குட் பேட் அக்லி படம் வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க அஜித்குமார் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்டு 200 கோடி ரூபாய் வசூலை குவித்தது.
ஏகே 64 எப்படி இருக்கும்?
இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படமான ஏகே 64 படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தது. ஏகே 64 படத்தையும் குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளார். சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படம் தொடர்பாக பேசும்போது,

"குட் பேட் அக்லி படம் ரசிகர்களுக்காக ஒரு படம் பண்ணோம். இந்த படம் 64 கொண்டாடும் விதமாக பொழுதுபோக்கு படமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். ஆதிக் ரவிச்சந்திரனின் இந்த பேச்சு அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
வெற்றி கிட்டுமா?
விடாமுயற்சி என்ற வித்தியாசமான திரைக்கதை கொண்ட படத்தில் ஒரு சாதாரண குடும்பத் தலைவராக அஜித்குமார் நடித்திருந்தார். அவர் அந்த படத்தில் மிக எளிமையாக நடித்திருந்தாலும் அஜித்திற்கான மாஸ் காட்சிகள் ஏதும் இல்லாமல் இருந்தது. அதனால், நல்ல படமாக இருந்தபோதிலும் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
ஆனால், குட் பேட் அக்லி முழுக்க முழுக்க அஜித் படங்களின் ரெஃபரென்ஸ் கொண்டே எடுக்கப்பட்ட படமாக இருந்தது. இந்த படத்தில் கதை வழக்கமான கதையாக இருந்தாலும் மாஸ் காட்சிகளை கொண்டே படத்தை வெற்றி பெற வைத்திருந்தனர். ஆனால், மீண்டும் ஒரு முறை அதுபோன்ற படத்தை எடுத்தால் அது கைகொடுக்காது என்றே திரை விமர்சகர்கள் பலரும் விமர்சித்து இருந்தார்கள்.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துவாரா?
இந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்து இயக்கும் ஏகே 64 படம் மார்க் ஆண்டனி போன்று வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக இருக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணையும் ஏகே 64 படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அஜித்குமார் தற்போது முழுவீச்சில் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அஜித்தின் 64வது படம் இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்குமார் தற்போது வித்தியாசமான கெட்டப்பிலே பொது வெளியில் உலா வருகிறார். அவரது அடுத்த படத்திற்கான கெட்டப்பாக அது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















