Neet Exam : திண்டிவனம் அருகே சோகம்... நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை?
திண்டிவனம் அருகே நீட் தேர்வு பயத்தின் காரணமாக மாணவி தற்கொலை, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை.

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நீட் தேர்வு பயத்தின் காரணமாக மாணவி தற்கொலை, உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை.
விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடுபேட்டை அருகிலுள்ள தாதாபுரம் கிராமத்தில், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் - கிருஷ்ணவேணி. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இவர்களது இரண்டாவது மகள் கடந்த 2022 ஆம் ஆண்டு அதே ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து புதுச்சேரியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டு கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: "உன் ரத்தத்தை குடிச்சிருவேன்" அம்மாவை கடித்து வைத்த மகள்.. பதறவைக்கும் வீடியோ!
அப்போது நீட் தேர்வில் 350 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தோல்வியடைந்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வீட்டிலிருந்தே நீட் தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஓபிசி சான்றிதழ் பதிவு செய்து அதனை பெற்றுள்ளார். இந்நிலையில் இன்று ஓபிசி சான்றிதழை அவரது தந்தை மற்றும் சகோதரர் இருவரும் அந்த மாணவியிடம் அளித்துவிட்டு விவசாய வேலைக்காக நிலத்திற்கு சென்றுள்ளனர்.
மாலை மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்தபோது அந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் செய்வதறியாமல் உடலை வீட்டிலேயே வைத்திருந்த நிலையில் இதனை அறிந்த வெள்ளிமேடு பேட்டை காவல்துறையினர் இரவு 11 மணி அளவில் பெண்ணின் வீட்டிற்கு சென்று உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து உயிரிழந்த மாணவியன் தந்தை ராமதாஸ் கூறுகையில்:
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் இன்று தான் ஓபிசி சான்றிதழை பெற்று வந்து வழங்கினோம் பின்னர் நிலத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் நீட் தேர்வின் மீதான பயத்தின் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

