புதுச்சேரிக்கு இனி மின்னல் வேகத்தில் போகலாம்; போட்டாச்சு பூஜை.. வருகிறது 4 வழிச்சாலை..!
ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் வெள்ளிமேடுப்பேட்டை - பாண்டி (வழி) மயிலம் சாலை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியினை பூமி பூஜை மூலம் அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்: நெடுஞ்சாலைத்துறை சார்பில், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் வெள்ளிமேடுப்பேட்டை - பாண்டி (வழி) மயிலம் சாலை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியினை பூமி பூஜை மூலம் அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
திண்டிவனம் வட்டம், தழுதாளி கிராமத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், வெள்ளிமேடுப்பேட்டை பாண்டி (வழி) மயிலம் சாலை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியினை பூமி பூஜை மூலம் இன்று (26.02.2025) அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் பொன்முடி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்குமான பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் அதற்கு சாலை வசதி இன்றியமையததாக இருந்திட வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் நகர்ப்பகுதிகளில் மேம்பாடு அடையும் வகையில் உயர்தர சாலைகள் அமைப்பதற்கான தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்து வருகிறார்கள்.
அதனடிப்படையில், இன்றைய தினம், திண்டிவனம் வட்டம், தழுதாளி கிராமத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் வெள்ளிமேடுப்பேட்டை பாண்டி (வழி) மயிலம் சாலை இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக கி.மீ. 30/2 முதல் 35/2 வரை 5 கிலோமீட்டர் நீளத்திற்கு அகலப்படுத்தும் பணியானது பூமி பூஜை மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை 2021-2022-ல் நெடுஞ்சாலை துறையின் மானிய கோரிக்கையில் சாலை மேம்பாட்டு திட்டம் (CMRDP) 2021-2022 மூலம் இருவழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக அகலப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வகையில், வெள்ளிமேடுபேட்டை பாண்டி (வழி) மைலம் சாலையானது கி.மீ. 0/0 முதல் 48/2 வரை மொத்தம் 48.2 கிலோ மீட்டர் நீளம் ஆகும். இச்சாலையானது விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இச்சாலையானது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களை இணைக்கும் முக்கியமான மாநில நெடுஞ்சாலையாகும் (மா.நெ.136). இச்சாலை, ஆற்காடு-திண்டிவனம் சாலை (SH-5) கி.மீ.83/4ல் பிரிந்து திருச்சிற்றம்பலம் நகரம் வழியாக செல்லும் சாலை (SHU-168) கி.மீ.8/8-ல் இணைகிறது. மேலும், இச்சாலையில் NH 66, கி.மீ. 10/2 மற்றும் NH 45, கி.மீ. 133/8 இணைகிறது.
இச்சாலையானது புகழ்பெற்ற மைலம் முருகன் கோவில், திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவில், பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் இணைக்கும் சாலையாக உள்ளது. மேலும், இப்பகுதியில், 300-க்கும் அதிகமான கல்குவாரிகளுக்கும் மற்றும் சேதராப்பட்டு தொழிற்சாலைகளுக்கும் செல்லும் வாகனங்கள் இச்சாலை வழியாகத்தான் சென்று வருகிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் அனைத்தும் இச்சாலை வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இச்சாலையை அகலப்படுத்துவது அவசியமான ஒன்றாகும். ஏற்கனவே, இச்சாலையில் 17 கிலோ மீட்டர் உள்ள சாலை இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. தற்போது கி.மீ. 30/2 முதல் 35/2 வரை 5 கிலோமீட்டர் நீளத்திற்கு இருவழித்தடத்திலிருந்து நான்குவழித்தடமாக அகலப்படுத்தும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சாலை அகலப்படுத்தும் பணியானது விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என வனத்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

