புது பொலிவுக்கு வருகிறது புதுவை; ரூ.1000 கோடியில் புதுச்சேரி - கடலூர் சாலை விரிவாக்கம்
Puducherry Cuddalore Road: இந்திராகாந்தி சதுக்கத்தில் இருந்து ராஜீவ் காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் அமைப்பது, 20 கி.மீ. தூரத்துக்கு கடலூர் சாலையை விரிவாக்கம் செய்து மேம்படுத்த 1,000 கோடியில் மேற்கொள்ள ஒப்புதல்.

புதுச்சேரி: புதுச்சேரியில் மேம்பாலம், கடலூர் சாலை விரிவாக்க திட்டம் 1,000 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் முதல்வர் ரங்கசாமிக்கு நிதின் கட்கரி கடிதம் அனுபியுள்ளார்.
புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கத்தில் இருந்து ராஜீவ் காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் அமைப்பது, 20 கி.மீ. தூரத்துக்கு கடலூர் சாலையை விரிவாக்கம் செய்து மேம்படுத்துவது ஆகிய இரு திட்டங்களை ரூ.1,000 கோடியில் மேற்கொள்ள ஒப்புதல் அளிப்பதாக குறிப்பிட்டு முதல்வர் ரங்கசாமிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் அனுப்பியுள்ளார். புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே, 100 அடி சாலை மற்றும் அரும்பார்த்தபுரம் ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. இருப்பினும், ராஜீவ் காந்தி சதுக்கம், இந்திரா காந்தி சதுக்கம் ஆகிய பகுதிகளில் மேம்பாலம் இல்லாததால் தினமும் காலை, மாலை நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல், புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையும் மேம்படுத்தாமல் உள்ளது. இதையடுத்து, இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு மத்திய அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டது. கடந்தாண்டு பாலத்தின் மாதிரி வரைப்படம் உள்ளிட்ட கருத்துருவுக்கு மத்திய அரசின் அனுமதியும் கிடைத்தது.
இதற்கிடையே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லியில் ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதி கட்கரியை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராணன் சந்தித்து பேசினார். அப்போது, இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கி தர வேண்டும். புதுச்சேரி - கடலூர் சாலையை விரிவாக்கம் செய்து மேம்படுத்தவும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், புதுவை மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் சிறப்பு நிதி அளிக்க கோரி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோருக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் முதல் இந்திராகாந்தி சிலை சதுக்கம் வரை மேம்பாலம் அமைக்கவும், 20 கி.மீ. தூரத்துக்கு புதுச்சேரி-கடலூர் சாலையை விரிவாக்கம் செய்து மேம்படுத்தல் திட்டங்களை 1,000 கோடிக்கு மேற்கொள்ள ஒன்றிய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதி கட்கரி அனுமதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் முதல் இந்திராகாந்தி சிலை சதுக்கம் வரை மேம்பாலம் அமைக்கவும், 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடலூர் சாலையை விரிவுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய இரு திட்டங்களுக்கு 1,000 கோடிக்கு மேற்கொள்ள அனுமதி அளிக்கிறேன். ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் முதல் இந்திராகாந்தி சிலை சதுக்கம் வரையிலான பணிகளுக்கு தகுந்த பொறியியல் தீர்வுகள் தேவை. இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இது வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் முடிக்கப்படும். விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டவுடன் 2025- 2026ம் நிதியாண்டில் திட்டத்தை தொடங்கும் நோக்கில் பணிக்கான செலவு மதிப்பீடு உடனடியாக ஒப்புதல் தரப்படும். 20 கி.மீ. தூரத்துக்கு கடலூர் சாலை விரிவாக்கம் தொடர்பாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் திட்ட வரையரை பரிசீலனைக்கு சமர்ப்பிக்க அறிவுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

