விழுப்புரத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
விழுப்புரத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக மைதானத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலும் ஒழித்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், போதைப்பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், அனைத்துத்துறை சார்பில் போதைப்பொருளினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்கள்.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வினை பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. இப்பேரணியில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, வி.ஆர்.பி மேல்நிலைப்பள்ளி, நகராட்சி உயர்நிலைப்பள்ளி, காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 1,000-க்கும் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், காவல்துறையினர் ஆகியோர் போதைப்பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று, போதைப்பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
போதைப்பொருள் பயன்படுத்துவதினால் நமது உடல் பாதிப்படைவதோடு மட்டுமல்லாமல் நமது குடும்ப பொருளாதாரத்தை பாதிப்படையச் செய்து, நம்முடைய சமுதாயத்தை மிகவும் பாதிப்படையச் செய்திடும். மேலும், எந்தவொரு நபர் போதைப்பொருள் பழக்கத்திற்கு உட்படுகிறாரோ அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவது மிகக் கடினம். எனவே, நாம் அனைவரும், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டு, போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக நம் மாவட்டத்தை உருவாக்கிட ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்