'பொன்னி' நிறைவடைந்த வேகத்தில் விஜய் டிவியில் அடுத்தடுத்து முடிவுக்கு வர உள்ள 2 சீரியல்கள்!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'பொன்னி' சீரியல் அண்மையில் முடிவடைந்த நிலையில், தற்போது 2 முக்கிய தொடர்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக, திரைப்படங்களுக்கு நிகரான வரவேற்பை தொலைக்காட்சி தொடர்களும் பெற்று வருகிறது. அனைத்து சீரியல்களுமே குடும்ப கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டாலும், தனித்துவமாக எடுக்கப்படுவதே சீரியல்களின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
அதே போல் திரைப்படங்களில் ஹீரோவை மையமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டாலும்... சீரியலை பொறுத்தவரை பெரும்பாலும் கதாநாயகியை முன்னிலை படுத்தி எடுக்கப்படுகின்றன. குறிப்பாக விஜய் டிவியில்... அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் ஜனரஞ்சகமான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், இல்லத்தரசிகளே தாண்டி இளம் ரசிகர்களையும் அதிகம் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 2 முக்கிய தொடர்கள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஓரிரு வாரத்திற்கு முன்பு தான், 'பொன்னி' சீரியல் நிறைவடைந்தது. இப்போது வெளியாகி உள்ள இந்த தகவல் விஜய் டிவி தொடர்களை மிஸ் பண்ணாமல் பார்க்க கூடிய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் டிவியில், மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் 'தங்க மகள்' தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2023 -ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொடரில் மிகப்பெரிய பணக்கார வீட்டு பெண்ணான ஹாசினி, போதையில் கார் ஓட்டியபோது 3 மகள்களை பெற்ற தந்தையின் மரணத்திற்கு காரணமாக மாறுகிறார். எனவே ஹாசினியின் அம்மா இறந்த ராமசாமியின் மகள்களிடம் மன்னிப்பு வாங்கிய பின்னரே நீ இந்த வீட்டுக்கு வரவேண்டும் என கூறி வெளியே அனுப்புகிறார்.

பணக்கார பெண்ணான ஹாசினி, ஒரு வேலைக்கார பெண்ணாக ராமசாமியின் வீட்டில் வேலை செய்யும் போது , ராமசாமியின் மச்சான் முத்துபாண்டியை திருமணம் செய்தது போல் நாடகம் போட நேர்கிறது. பின்னர் ஹாசினி உண்மையிலேயே முத்து பாண்டி மீது காதலில் விழ, மூன்று மகள்களிடம் இருந்தும் மன்னிப்பு கிடைக்கிறதா? இல்லையா என்பதை நோக்கி இந்த தொடர் சென்று கொண்டிருக்கிறது. மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 'தங்கமகள்' தொடரின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதே போல் விஜய் டிவியில் மிகவும் கலகலப்பாகவும் எமோஷ்னல் டச்சுடனும் ஒளிபரப்பாகி வரும் 'ஆஹா கல்யாணம்' தொடரில் சூர்யா மகாவை ஏற்றுக்கொண்டு வாழ துவங்கிய நிலையில், சூர்யா... விஜய் மற்றும் பிரபாவை சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார். அதே போல் கெளதம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதால் அவரிடம் மாற்றம் ஏற்பட்டு மனைவி ஐஷு மற்றும் குழந்தைக்காக வாழ துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த சீரியலையும் கூடிய விரைவில் முடிவுக்கு கொண்டு வர விஜய் டிவி தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.





















