எழும்பூர் இல்ல.. தாம்பரத்தில் இருந்து கிளம்பும் கொல்லம் எக்ஸ்பிரஸ்.. மக்களே தெரிஞ்சுக்கோங்க
புனரமைப்பு பணிகள் காரணமாக, கொல்லம் எக்ஸ்பிரஸ், எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து கிளம்பும் என தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது.

Kollam Express: சென்னை எழும்பூர் (EGMORE) ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து கொல்லம் எக்ஸ்பிரஸ் கிளம்பும் என தெற்கு ரயில்வே (Southern Railway) அறிவித்துள்ளது. அதோடு, சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலும், தாம்பரத்தில் இருந்து கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையம் புனரமைப்பு பணிகள் - EGMORE Railway Station Renovation:
அமிர்த பாரத் நிலையத் திட்டம் (ABSS) என்பது இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை படிப்படியாக மேம்படுத்துவதற்கான ஒரு நீண்டகால திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் விரிவான திட்டங்கள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் என்ன தேவை என்பதைப் பொறுத்து அதற்கான பணிகள் பல்வேறு கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது. ரயில் நிலையங்களை தூய்மையாகவும், வசதியாகவும், பயன்படுத்த எளிதாகவும் மாற்றுவதே இதன் குறிக்கோள்.
அந்த வகையில், சென்னை மண்டலத்தில் எழும்பூர் உள்பட 15 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு, சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் வரை இடையே நான்காவது பாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.
கொல்லம் எக்ஸ்பிரஸ் - Kollam Express Revised Terminal Points
ஆரம்பத்தில், அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் புனரமைப்பு பணிகளை 8 மாதத்தில் இருந்து 12 மாதங்களில் முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருந்தது. ஆனால், பல மாதங்கள் கடந்தும் புனரமைப்பு பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், தாமதமாக நடந்து வரும் புனரமைப்பு பணிகள் காரணமாக சென்னை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து கொல்லம் எக்ஸ்பிரஸ் கிளம்பும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதோடு, சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலும், தாம்பரத்தில் இருந்து கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போதிலிருந்து இந்த மாற்றம்?
அதேபோல், தாம்பரத்தில் இருந்து ஹைதராபாத் வரை செல்லும் சார்மினார் எக்ஸ்பிரஸ், தாம்பரத்திற்கு பதிலாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற ரயில்களின் விவரங்கள் -
சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகியவை தாம்பரத்தில் இருந்து கிளம்பும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல, வந்து சேருமிடமும் தாம்பரம் ரயில் நிலையமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் - ஹைதராபாத் சார்மினார் தினசரி எக்ஸ்பிரஸ் ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18 வரை சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு, அதே ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் என கூறப்பட்டுள்ளது.






















