வாணியம்பாடி அருகே கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சோகம் - விபத்துக்கு காரணம் இதுதான்
வாணியம்பாடி அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் அண்ணன் தம்பி உட்பட 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த விஜய்,(8 ஆம் வகுப்பு), சூர்யா (7ஆம் வகுப்பு) அண்ணன் தம்பிகளான இவர்கள், அதே பகுதியை சேர்ந்த ரபீக் (8 ஆம் வகுப்பு) என்ற மாணவருடன் ஒன்றாக கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் மூவரும் தினந்தோறும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வருவார்கள். இன்று இவர்கள் மூவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது வேலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் 8 மாணவர்கள் பெங்களூர் பதிவென் கொண்ட காரில் ஏலகிரியை நோக்கி அதிவேகமாக சென்றனர். அப்போது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் குறுக்கு நெடுக்குமாக ஓடியது. அதில் சாலையோரம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது பயங்கரமாக மோதி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் கார் மோதியதில் மாணவர்கள் மூன்று பேரும் தூக்கிவீசப்பட்டனர்.
அப்போது நெடுஞ்சாலையில் இருந்த பொதுமக்கள் இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடிச்சென்று பள்ளி மாணவர்களை காப்பற்ற முயன்றனர். மாணவர்கள் மூவரும் தூக்கி வீசப்பட்டதில் மாணவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்ப இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்த 8 மாணவர்களும் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினர். உடனடியாக இவ்விபத்து குறித்து அறிந்த வலியாம்பட்டு மற்றும் கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பெற்றோர்கள் உயிரிழந்த மாணவர்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். உடனடியாக அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுபட்ட உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் சாலை மறியலை கைவிடக்கோரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் சென்று வரக்கூடிய பகுதியில் மேம்பாலம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
இவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் மேம்பாலம் கட்டி தருவதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு மாணவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இவ்விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்களிடையே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் , வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த மாணவர்களின் உடலை பார்வையிட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது