(Source: ECI/ABP News/ABP Majha)
திருச்சியில் பரபரப்பு.. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 500 பேர் - காரணம் என்ன?
திருச்சி மாநகராட்சியை விரிவாக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று கிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாநகராட்சி விரிவாக்க திட்டம்
திருச்சி மாநகராட்சியில் இப்போது 65 வார்டுகள் உள்ளது. திருச்சி மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மாநகரை சுற்றியுள்ள வளர்ச்சி அடைந்த பகுதிகளை இணைத்து 100 வார்டுகள் கொண்டதாக திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபையில் நகராட்சி நிர்வாகத் துறை, மானியக் கோரிக்கையில் அமைச்சர் நேரு அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி விரிவாக்க பணிகளுக்காக அருகிலுள்ள ஊராட்சிகளை இணைக்கவும், வார்டுகளை சீரமைக்கும் பணிகளையும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள் பணிகளை தீவிரமாக தொடங்கினர்.
குறிப்பாக திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யும் வகையில் அந்தநல்லூர் ஒன்றியம், மல்லியம்பத்து, மருதாண்ட குறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், மணிகண்டம் ஒன்றியம், முடிகண்டம், மேக்குடி, கே. கள்ளிக்குடி, தாயனூர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, நாகமங்கலம், புங்கனூர், திருவெரும்பூர் ஒன்றியம், பணைய குறிச்சி, குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி கீழக்குறிச்சி, லால்குடி ஒன்றியம், தாளக்குடி, அப்பாதுரை எசனைக்கோரை, புதுக்குடி, மண்ணச்சநல்லூர் ஒன்றியம், மாதவப்பெருமாள் கோயில், பிச்சாண்டார் கோயில், கூத்தூர், ஆகிய 25 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு 100 வார்டுகளாக திருச்சி மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Kerala Lottery Result Today (12.08.2024): WIN WIN W-782-782 : பரிசுகள் அறிவிப்பு 3 மணிக்கு..
திருச்சி மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் வெளியாகிய நாளில் இருந்து பல்வேறு கிராம மக்கள் மாநகராட்சியுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்கள் நடந்தினர். இதனால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிதாக இணைக்கப்பட உள்ள கிராம பொதுமக்களை அழைத்து கருத்து கூட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு கிராம பகுதி மக்கள் மாநகராட்சியுடன் தங்களது கிராமத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் தொடர்ந்து பொதுமக்களிடையே எதிர்ப்பு அலை தீவிரமானதால் திட்டம் சில மாதங்களாக கைவிடப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு சில மாதங்களாக திருச்சி மாநகராட்சியை விரிவு படுத்துவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
திருச்சியில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்..
இந்நிலையில் பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் மாநகராட்சி உடன் இணைப்பதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மாநகராட்சியுடன் எங்களது கிராமத்தை இணைத்தால் விவசாயம் அழிந்துவிடும், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், அதவத்தூர் மற்றும் மணிகண்டன் பகுதியை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களது பகுதியை மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் எங்களது கிராம பகுதியை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் அழைத்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது மாநகராட்சி விரிவாக்க திட்டத்திற்கு எங்களுடைய கிராமங்களை இணைப்பது சரியில்லை, நாங்கள் மாநகராட்சியுடன் இணைவதற்கு தயாராக இல்லை ஆகையால் இந்த திட்டத்தை கைவிடுமாறு பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.