ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா - பாதுகாப்பு பணியில் 2,000 காவல் துறையினர்
’’ஸ்ரீரங்கம் கோயில் உட்புறத்தில் உள்ள பகுதிகளில் 117 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று கோயிலின் வெளிப்புறப் பகுதியில் சுற்றி 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன’’
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றிவணங்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் ஆலயத்தின் முக்கியவிழாவான வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு திருவிழா நேற்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் திருவாய்மொழி திருநாட்கள் எனப்படும் பகல்பத்து திருவிழா இன்று தொடங்கியது. நம்பெருமாள் அர்ச்சுனமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இந்நிலையில் ஶ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பாதுக்காபு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்க்கொண்டார். குறிப்பாக கோயில் அருகில் தற்காலிகமாக காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதை திறந்து வைத்தார்.
மேலும் மக்களின் பாதுக்காப்பை கருத்தில் கொண்டு ஸ்ரீரங்கம் கோயில் உட்புறத்தில் உள்ள பகுதிகளில் 117 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோன்று கோயிலின் வெளிப்புறப் பகுதியில் சுற்றி 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார். அனைத்துமே தற்காலிக காவல் நிலையத்தில் கண்காணித்து வருகிறோம். மக்களுக்கான காவல் உதவி மையம் 70 இடத்தில் அமைத்துள்ளோம். கோயிலுக்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களின் நம்பர்களை பதிவு செய்யக்கூடிய வகையில் கேமரா அமைத்துள்ளோம். பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக 32 இடங்களில் ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்டுள்ளது. 14 இடங்களில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 17 ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றார். மேலும் மக்கள் தங்களது உடமைகள், பொருட்கள், அனைத்தையும் பாதுக்காப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார். குற்ற செயல்களில் யாராவது ஈடுபட்டாளோ, சந்தேகம்படும்படி யாராவது இருந்தாளோ உடனடியாக காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டி மீண்டும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் என்ற புதியவகை வைரஸ் தீவிரமாக பரவிவருகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் தடுப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தபட்டுள்ளது. ஆகையால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அரசு கூறிய கொரோனா தொற்று விதிமுறையை கட்டாயமாக பின்பற்றி, தனிமனித இடைவெளியை பின்பற்றியும், முககவசம் கட்டாயமாக அணிந்து சாமியை தரிசனம் செய்ய வர வேண்டும், காவல்துறை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார். மேலும் வரும் 14 தேதி அன்று சொர்க்கவாசல் திறப்பு அன்று பக்தர்கள் அனுமதிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பார். பக்தர்களை தேங்கவிடாமல் பகல்பத்து, ராப்பத்து விழாவிற்கு அனுமதித்து உள்ளோம். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் தெரிவித்தார்.