Afghan Vs India: இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு - நடந்தது என்ன.?
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க இன்று 3 நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

சீனாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை, ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க, மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவிற்கு ஆதரவளித்த ஆப்கானிஸ்தான், தற்போது சீனாவுடன் கைகோர்த்துள்ளது.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்
சீனா, பாகிஸ்தானில் ஏராளமான முதலீட்டை செய்துள்ளது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். அதில் முக்கியமான ஒன்று, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம். இது வடக்கு-தெற்கு பொருளாதார பாதை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வழித்தடம், பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய முக்கியமான பொருளாதார பாலம். இதன் மொத்த கட்டுமானச் செலவு சுமார் 54 பில்லியன் டாலர்களாகும்.
சிபிஇசி என அழைக்கப்படும் இந்த வழித்தடம், சீனாவின் காசர் நகரையும், பாகிஸ்தானின் குவாடர் நகரையும் சாலை, குழாய்கள், இருப்புப் பாதை வழியே இணைக்கும் திட்டமாகும். இந்த பொருளாதார பாதை, பாகிஸ்தானின் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவை பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. மேலும், உள்கட்டமைப்பு மட்டுமல்லாமல், சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கு இடையேயான ஒத்துழைப்புப் பகுதிகளையும் இத்திட்டம் கொண்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, இந்த வழித்தடத்தால், ஐரோப்பாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் மேம்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்கப்படும் சிபிஇசி
இந்த சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்கப்பட உள்ளது. இன்று சீனாவின் பெய்ஜிங்கில் மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பங்கேற்ற கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெறியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் மற்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த முத்தரப்பு சந்திப்பின்போது, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை, ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க 3 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் தேசிய கண்ணியத் பாதுகாக்க சீனா ஆதரவளிப்பதாக, சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார்.
Pakistan, China, and Afghanistan stand together for regional peace, stability, and development. pic.twitter.com/MX9fLJCG6L
— Ishaq Dar (@MIshaqDar50) May 21, 2025
சிபிஇசி-க்கு இந்தியாவின் எதிர்ப்பு
இந்த சீனா-பாகிஸ்தன் பொருளாதார வழித்தடத்தை இந்தியா பலமுறை விமர்சித்துள்ளது. ஏனெனில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக இந்த வழித்தடம் செல்கிறது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியையும் இந்தியா எதிர்க்கிறது. அந்த திட்டத்தில் தற்போது சிபிஇசி-யும் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தியாவிற்கு இது பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
முன்னதாக, ஆபரேஷன் சிந்தூரின்போது, இந்தியாவின் பக்கம் நின்ற ஆப்கானிஸ்தான், தற்போது சீனாவுடன் கைகோர்த்து, இந்தியாவிற்கே ஆப்பு வைக்கும் வேலையில் இறங்கியுள்ளது. இதற்கு இந்தியாவின் எதிர்வினை என்னவாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.





















