MI Vs DC: டாப் 4 கன்ஃபார்ம் - எண்ட்ரி கொடுத்த மும்பை, மல்லுக்கட்டும் குஜராத் & பெங்களூரு - லக்னோ பலிகடாவா?
IPL 2025 MI Vs DC: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நான்காவது அணியாக மும்பை, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

IPL 2025 MI Vs DC: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோத உள்ளன.
4வது அணியாக மும்பை எண்ட்ரி:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்காக டெல்லி மற்றும் மும்பை அணிகள் நேற்று மல்லுக்கட்டின. வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 180 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி,சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால், 18.2 ஓவர்களில் 121 ரன்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்படி, டெல்லி அணி நடப்பு தொடரில் இருந்து வெளியேற மும்பை நான்காவது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
மல்லுக்கட்டும் குஜராத் & பெங்களூரு:
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு, இறுதிப்போட்டிக்கு நுழைவதற்கான தகுதிச்சுற்று போட்டியில் விளையாட இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். இதற்காகவே முதல் இரண்டு இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய சூழலில் குஜராத் அணி 12 போட்டிகளில் மட்டுமே விளையாடி, 9 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் உள்ளது. அதேநேரம், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் தலா 12 போட்டிகள் விளையாடி, தலா 17 புள்ளிகளுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. மீதமுள்ள போட்டிகளிலும் வென்று முதல் இடத்தை தக்க வைக்க குஜராத் அணி தீவிரம் காட்டி வருகிறது.பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளும் கைவசம் இரண்டு போட்டிகளிலும் வென்றால், ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படலாம். மும்பையை பொறுத்தவரையில் கடைசி போட்டியில் வெற்றி பெறுவதோடு, பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் கைவசம் உள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றால் தான் MI புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற முடியும்.
லக்னோ சம்பவம் செய்யுமா?
ஐபிஎல் தொடரில் நான்கு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டாலும், எந்த அணிக்கு எந்த இடம் என்பது தற்போது வரை உறுதியாகவில்லை. இந்த சூழலில் தான், அகமதாபாத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. லக்னோ அணி ஏற்கனவே நடப்பு தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. அதேநேரம், குஜராத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், முதல் இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்று உறுதியாகிவிடும். இதுவரை வெறும் 3 போட்டிகளில் மட்டுமே தோல்விகண்டுள்ள குஜராத்திற்கு, லக்னோ அணி அதிர்ச்சி அளிக்குமா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இதுவரை இரு அணிகளும் 6 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் குஜராத் அணியே 4 முறை வெற்றி பெற்றுள்ளது.




















