ஆடு குறுக்கே வந்ததால் விபரீதம்; கார் விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த சோகம்
ஆட்டின் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் புதுக்குடி பகுதியில் தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தந்தை, மகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் விக்னேஷ்வரன் (34). பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்தும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி காயத்ரி (29). இத்தம்பதியின் மகள் யாழினி (8). இவர்கள் 3 பேரும் நேற்று தஞ்சாவூருக்கு காரில் வந்தனர். காரை விக்னேஷ்வரன் ஓட்டி வந்துள்ளார். பின்னர் மாலையில் திருச்சி காரில் புறப்பட்டனர். தஞ்சாவூர் – திருச்சி நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே புதுக்குடி பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையின் குறுக்கே திடீரென்று ஆடு ஓடி உள்ளது. இதனால் அதன் மீது மோதாமல் இருக்க விக்னேஸ்வரன் காரை திருப்பி உள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்தது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் செங்கிப்பட்டி போலீசுக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் அளித்தனர்.
உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செங்கிப்பட்டி போலீசார் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் செல்லும் வழியிலேயே விக்னேஷ்வரன், யாழினி இருவரும் இறந்தனர். காயத்ரி காலில் முறிவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை, மகள் இருவரும் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.