22 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி... 2 பேரை தட்டித் தூக்கிய தஞ்சை போலீஸ்
2018-ம் ஆண்டு ஒரு விளம்பரத்தை தொலைக்காட்சிகளில் கொடுத்தது. அதில் "குறைந்த முதலீடு செய்தால் வாகனம் வாங்கி தரப்படும்" என்ற அறிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: குறைந்த தொகை முதலீடு செய்தால் வாகனம் வாங்கித்தருவதாக கூறி 22 பேரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 2 பேரை தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் இதுபோன்ற போலியான அறிவிப்புகளை கண்டு ஏமாந்து பணத்தை இழக்காதீர்கள் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு விளம்பரத்தை தொலைக்காட்சிகளில் கொடுத்தது. அதில் "குறைந்த முதலீடு செய்தால் வாகனம் வாங்கி தரப்படும்" என்ற அறிவிக்கப்பட்டது.
இதைப்பார்த்த தஞ்சை மேலவீதியை சேர்ந்த வைத்தீஸ்வரன் என்பவர் அதை நம்பி சிறு தொகையினை கட்டி இருசக்கர வாகனத்தை வாங்கினார். அதன் பின்னர் மேலும் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் 4 சக்கர வாகனம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி முன்தொகையாக ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் தொகையினை பெற்று ஏமாற்றி உள்ளது.
இதுபோன்று அந்த நிறுவனம் 22 நபர்களிடமும் பண மோசடி செய்ததாக வைத்தீஸ்வரன் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அந்த நிறுவனம் ரூ.10 லட்சம் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த அர்பஷ் (46), சேலம் மாவட்டம், அயோத்திப்பட்டினத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் (30) ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் அவர்கள் கோயம்புத்தூரில் இருப்பதாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தனிப்படை போலீசார் கோயம்புத்தூர் சென்று நேற்று அர்பஷ், ஹரிபிரசாத் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், இது போன்ற நிறுவனங்களின் உண்மைத் தன்மை தெரியாமல் பொதுமக்கள் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்கள், செல்போன் எண்ணிற்கு வரும் குறுந்தகவல்கள் அவற்றில் வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை கட்டி ஏமாந்து விட வேண்டாம். பணம் அனுப்ப கூறுபவர்கள் குறித்து அவர்களின் உண்மை தன்மையை அறிந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

