தாயுக்கும் மனைவிக்கும் சிலை வைத்தவர்! உயிரிழந்த சமூக ஆர்வலர்.. நேரில் வந்த துர்கா ஸ்டாலின்!!
மயிலாடுதுறையில் தன் வீட்டில் தாய் மற்றும் மனைவிக்கு சிலை அமைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகனின் உடலுக்கு துர்கா ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மயிலாடுதுறையை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்மோகன். இவர் மறைந்த தனது தாய் கமலாம்பாள் மற்றும் மனைவி மீனாட்சியம்மாளுக்கு தன் வீட்டின் வாசலிலேயே சிலை அமைத்து வழிபட்டு வந்தார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலம் அடைந்தார்.
மேலும், மக்களிடம் நன்மதிப்பு பெற்ற காவல் துறை அதிகாரிகளில் மதன்மோகனும் ஒருவர். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக திருக்குறள் உரை உள்ளிட்ட நூல்களும், பல்வேறு கவிதை தொகுப்புகளும் வெளியிட்டவர். தொடர்ந்து தன்னால் முடிந்த உதவிகளை பல ஏழை எளியவர்களுக்கு ஊரில் செய்து வந்தவர். இதனால் இப்பகுதி மக்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் கடந்த மாதம் ஜீன் 15 -ஆம் தேதி தனது 73 -வது பிறந்தநாளை தனது தாய், மனைவியின் சிலை முன்பு கொண்டாடினார்.
இந்நிலையில், இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து தனது உறவினர் வீட்டுக்கு காரில் சென்ற மதன்மோகன், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, மதன்மோகனின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அதனை தொடர்ந்து அவரது உடலுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், தமிழக அரசு கொறடா கோவி.செழியன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா.முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அவர் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வந்த சமூக ஆர்வலர் மதன் மோகனின் இறப்பு மயிலாடுதுறை மாவட்ட மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதி மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றி வந்த மதன்மோகனின் இறப்பு தங்களுக்கு பெரும் இழப்பு என்றும், இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் எனவும், இது போன்று சமூக சேவைகளில் ஈடுபடும் மனிதர்களின் வாழ்நாளை அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

