Flood Alert: பூண்டி ஏரி 2 மணிக்கு திறப்பு - கொசஸ்தலை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கொசஸ்தலை ஆற்றின் இரு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து மதியம் 2 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரி தண்ணீர் செல்லும் கொசஸ்தலையாறு பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை ஆதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
நீர்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி நீர் இருப்பு 33.95 அடியாகவும் கொள்ளளவு 2807 மிலிலியன் கன அடியாகவும் உள்ளது. பூண்டியில் நீர் வரத்து காலை 6.00 மணி நிலவரப்படி 1691 கன அடியாக உள்ளது. தற்போது பருவ மழையினால் நீர் வரத்து தொடர்ச்சியாக உயர்வதால் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
அணைக்கு வரும் நீர் வரத்து 34 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றும் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திலிருந்து இன்று பிற்பகல் 2.00 மணி அளவில் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில், கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும். எனவே, நீர் தேகத்தில் இருந்து மிகை நீர் வெளியேறும் போது கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான திருவள்ளூர் மாவட்டத்தில் 30 கிராமங்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
இதனிடையே, தமிழ்நாட்டில் வரும் 11ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்டங்களிலும், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்