CM Stalin: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடர்பான முதலமைச்சர் ஸ்டாலினின் ஆலோசனைக் கூட்டத்தில், 9 அமைச்சர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை:
தமிழகத்தில் அடுத்த மாதம் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பயிர் சாகுபடி செய்திருந்த விவசாயிகளை தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தான் அவர்கள் அதிகம் நம்பியுள்ளனர். ஆனால், பருவமழை தொடங்குவதற்கு முன்பே கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை தடுக்க, பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்:
காலை 11 மணியளவில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பொதுப்பணி - நெடுஞ்சாலை, வேளாண்மை, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், வருவாய்,சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள், அரசுத் துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர். அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
விரைந்து முடிக்க திட்டம்:
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கவுள்ளார். மழைநீர் வடிகால் கட்டுமான பணி, வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி, சாலைகளில் மழைநீர் தேங்காமல் தவிர்ப்பது, நீர்நிலைகள், கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் அதன் அருகே உள்ள மாவட்டங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டுமென தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார். இதுதொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
மீட்பு பணி:
அதோடு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைப்பது, பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி கிடைக்கச் செய்வது, மின்சார சேவை தொடர்ந்து கிடைக்கச் செய்வது மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளை உடனடியாக தவிர்ப்பது தொடர்பாகவும் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுப்பது, நோய்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு வலியுறுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.