Food Safety Index : குஜராத்தை பின்னுக்கு தள்ளிய தமிழ்நாடு.. உணவு பாதுகாப்பில் நாமதான் டாப்.. வெளியான அசத்தல் பட்டியல்
ஆரோக்கியமான நாட்டை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2021-22 ஆண்டுக்கான மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில், குஜராத்தை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. 17 பெரிய மாநிலங்கள் கொண்ட பட்டியலில், குஜராத் இரண்டாவது இடமும் மகாராஷ்டிரா மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.
2020-21 ஆண்டுக்கான பட்டியலில் கேரளா இரண்டாவது இடமும் தமிழ்நாடு மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தது. சிறிய மாநிலங்கள் கொண்ட பட்டியலை பொறுத்தவரை, கோவா முதல் இடத்திலும் மணிப்பூர் இரண்டாவது இடத்திலும் சிக்கிம் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
யூனியன் பிரதேசங்களுக்கான பட்டியலில், ஜம்மு காஷ்மீர், டெல்லி, சண்டிகர் ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. உணவு பாதுகாப்பு நாளான நேற்று பட்டியலை வெளியிட்டு பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "அனைத்து குடிமக்களின் உடல்நல பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு அரசு உறுதி பூண்டுள்ளது" என்றார்.
மனித வளம், நிறுவன தரவுகள், விதிகளுக்கு உட்பட்டு செயல்படுதல், உணவு சோதனை கூடம், பயற்சி மற்றும் திறன் கட்டமைப்பு மற்றும் நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பில் சிறந்து விளங்கிய மாநிலங்களுக்கு விருதுகளை அளித்து கெளரவித்து பேசிய மன்சுக் மாண்டவியா, "ஆரோக்கியமான நாட்டை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதே தற்போதைய தேவை" என்றார். நாட்டின் உணவு பாதுகாப்பு கட்டமைப்பில் போட்டிமிக்க நேர்மறையான மாற்றத்தை உண்டாக்கி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்கப்படுத்தி குடிமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்க செயல்படுவதே நோக்கம் என 2018-19ஆம் ஆண்டுக்கான குறியீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மேலும் மன்சுக் மாண்டவியா, "ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவை மக்களுக்கு வழங்குவதில், உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் 2006இன்படி அமைக்கப்பட்டுள்ள, உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் மிக முக்கிய பங்கை ஆற்றியுள்ளது" என்றார்.
ஆரோக்கியமான பாதுகாப்பான நிலையான உணவு சூழலை உருவாக்கும் நோக்கில் திட்டங்களை வகுத்து அதை செயல்படுத்திய ஸ்மார்ட் சிட்டிகளுக்கும் இந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டது. போட்டியில் வென்ற 11 வெற்றியாளர்களுக்கு மத்திய அமைச்சர் விருதுகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்