அசத்தல் வெற்றி... அள்ளினார் தங்கப்பதக்கம்: தஞ்சை மாணவரின் சாதனை
மாணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காப்பு கலைகளை கற்று வருகிறார். முக்கியமாக சிலம்பம் சுற்றுதல், வாள் வீசுதல், சுருள்வாள் வீச்சு போன்றவற்றை கடினமாக பயின்று வருகிறார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவர் வாள் வீசும் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
வெற்றியின் சாவி எங்குள்ளது. தோல்வியிடம்தான் அந்த சாவி உள்ளது. அதை எடுப்பது முயற்சி என்று உழைப்பில் உள்ளது. அந்த முயற்சி விடாமுயற்சி ஆகும் போது சாதனைகள் பிறக்கின்றன. சாதிப்பவர்கள் உருவாகின்றனர். 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி... என்றார் பாரதி. திடமான நம்பிக்கையுடன் திறமையும், முயற்சியும் கைகோர்க்கின்றபோது வெற்றி வசப்பட்டு விடும். அந்த வெற்றி உயரத்திற்கு கொண்டு செல்லும். ஆனால் உயரம் கண்டு மயங்காமல் உணர்வை கண்டு மேலும் மேலும் முயற்சிக்கும் போது தடைகள் நொறுங்கும்.
முயற்சிதான் வெற்றியின் முதல்படி. அந்த முதல்படிக்கு செல்வது எப்படி என்று விடை கிடைத்தால் அது வாழ்வின் வெற்றி. உனது வெற்றியை மகிழ்ச்சியுடன் முயற்சியை துணை கொண்டு தேடிப்பார். இதோ நான் இங்கிருக்கிறேன் என்று வெற்றி உன்னை தேடி வரும். உழைப்பு, உழைப்பின் பலன் இது கிடைக்க உழைத்துக் கொண்டே காத்திருக்க வேண்டும். இதை கற்றுக் கொண்டால் காலம் உழைப்பின் பலனை நம் கைகளில் கொடுக்கும். அதுதான் மகிழ்ச்சியான வெற்றியாக இருக்கும். அதுபோன்று கடுமையான உழைப்பில் வாள்வீச்சு போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் தஞ்சை மாணவர்.
தஞ்சாவூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதியின் மகன் கோவர்த்தன் (14). இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் படித்து வருகிறார். இந்த மாணவர் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காப்பு கலைகளை கற்று வருகிறார். முக்கியமாக சிலம்பம் சுற்றுதல், வாள் வீசுதல், சுருள்வாள் வீச்சு போன்றவற்றை கடினமாக பயின்று வருகிறார்.
இந்த மாணவருக்கு கரந்தை பகுதியை சேர்ந்த சேயோன் சிலம்பப்பள்ளி பயிற்சியாளர்கள் நிர்மலா, விஷ்வேஸ்வரன் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர். மாணவர் கோவர்த்தன் ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல், வாள் வீசுதல், சுருள்வாள் வீசுதல் போட்டிகள் பலவற்றில் பங்கேற்றுள்ளார். இதில் மாவட்டம், மாநில அளவில் முதலிடம் பிடித்து விருதுகளும், சான்றிதழ்களும் பெற்றுள்ள மாணவர் கோவர்த்தன் தேசிய அளவில் ஹரித்துவாரில் நடந்த 14வயதுக்கு உட்பட்டோருக்கான வாள் வீசும் போட்டியில் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளார்.
இந்த பிரிவில் மகாராஷ்டிரா, ஹரியானா, உத்தரகாண்ட், டெல்லி, சத்தீஸ்கர் மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 30 போட்டியாளர்கள் பங்கேற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்ற மாணவர் கோவர்த்தன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழை வென்றுள்ளார்.
இதுகுறித்து பயிற்சியாளர்கள் நிர்மலா, விஷ்வேஸ்வரன் ஆகியோர் கூறுகையில், சிலம்பம் கற்கும் போது, உடலின் வலிமை, வேகம், நெகிழ்வுத்தன்மை, ஒருங்கிணைப்புத்திறன் ஆகியன மேம்படும், தன்னம்பிக்கை, ஒழுக்கம், கவனம், சுயக்கட்டுப்பாடு போன்ற குணங்களும் வளரும். தாக்குதல் மற்றும் தற்காப்பு உத்திகளை கற்றுத் தருவதால், தன்னைக் காத்துக்கொள்ளும் திறன் கூடும். மாணவர் கோவர்த்தன் மாவட்ட அளவில் ஒற்றைக்கம்பு சுற்றுதல், இரட்டை கம்பு சுற்றுதல், வாள் வீச்சு போட்டியில் மாவட்டம், மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளார். தற்போது தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று சாதித்து தஞ்சைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

