Covid-19 Vaccine Global Tender: தமிழ்நாட்டுக்கு தடுப்பூசிவழங்க முன்வராத தனியார் நிறுவனங்கள்
தடுப்பூசி கொள்முதல் செய்வதற்காக மகாராஷ்டிரா , கேரளா, கர்நாடகம், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் கோரிய உலகளாவிய டெண்டர்களுக்கும் இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை
90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்கவேண்டும் என்ற தமிழக அரசின் உலகளாவிய ஒப்பந்தத்துக்கு எந்தவொரு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களும் விண்ணப்பிக்கவில்லை. இந்த, ஒப்பந்தம் கோரி விண்ணப்பம் செய்வதற்கான கால அளவு நேற்றுடன்( ஜூன் 5) முடிவடைந்தது. 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துது. கடந்த மே 15-ஆம் தேதி, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் கோரியது. அதில், முதற்கட்டமாக, 90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகளை விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜூன் மாதம் 5-ஆம் தேதிக்குள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரையில் எந்தவொரு தடுப்பூசி நிருவனங்களும் விண்ணைபிக்க முன்வரவில்லை. இதன்மூலம், 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடப்படவேண்டும் என்று திட்டத்தில் தொய்வு நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, மாநிலங்கள் மாநிலங்கள் அறிவித்துள்ள உலகளாவிய டெண்டர்கள் கருத்து தெரிவித்த மத்திய அரசு, "தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நிதியளிப்பது முதல் உற்பத்தியை அதிகரிக்க உடனடி அனுமதி அளிப்பது, இந்தியாவுக்கு வெளிநாட்டு தடுப்பூசிகளை கொண்டு வருவதுவரை மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. 2020-ஆம் ஆண்டு மத்தியிலிருந்தே, அனைத்து முக்கிய சர்வதேச தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன், மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பைசர், ஜே அண்டு ஜே மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தடுப்பூசிக்காக மாநிலங்கள் அறிவித்துள்ள உலகளாவிய டெண்டர்களால் ஒன்றும் நடக்கப் போவதில்லை; குறைந்த கால அளவில் டெண்டர்கள் கோரி தடுப்பூசிகளை பெற முடியாது" என்று தெரிவித்தது.
ஜூன் 2ம் தேதி வரை, 1 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்துக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 93.3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஜூன் மாதத்தின் முதல் 2 வாரத்தில் தமிழகத்துக்கு 7.48 லட்சம் தடுப்பூசி டோஸ்களும், அடுத்த 2 வாரத்தில் கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசி டோஸ்களும் கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. தடுப்பூசி கொள்முதல் செய்வதற்காக மகாராஷ்டிரா , கேரளா, கர்நாடகம், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் கோரிய உலகளாவிய டெண்டர்களுக்கும் இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை. முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை ஆய்வு செய்து அவ்வளாகத்தில் தடுப்பூசி உற்பத்தியை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, மத்திய அரசு செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை 15 ஆண்டுகள் குத்தகைக்கு தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானித்து, அதற்கான டெண்டர்களையும் அறிவித்தது. ஆனால், இதற்கும் எந்த தனியார் நிறுவனமும் ஒப்பந்தம் கோர முன்வரவில்லை. இதனையடுத்து, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை தமிழ்நாடு அரசுக்கு குத்தகைக்கு விட வேண்டும் என்றும் மு.க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
OFFLINE/ONLINE GLOBAL TENDER FOR SUPPLY OF COVID-19 VACCINE
செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழகம் ஏற்பதே மிகச்சிறந்த தீர்வு - அன்புமணி
Corona Vaccine Myths and Facts | இந்தியாவின் தடுப்பூசி செயல்முறை பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்