Edappadi Palaniswamy: ”தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை” - திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Edappadi Palaniswamy: தமிழ்நாட்டில் சட்ட - ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்கதையாகி வருவதாகவும், தனக்குத் தானே கண்டனம் தெரிவித்து தப்பிக்க நினைக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக கண்டிப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கை:
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும், பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும் தொடர்ச்சியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை காவல் துறை எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. "தினசரி நாளிதழ்களைப் படியுங்கள்" என்று ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் இந்த முதலமைச்சர், தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தவிர்த்து எந்த நாளிதழையும் படிப்பதாகத் தெரியவில்லை. படித்திருந்தால், தனது அலங்கோல விடியா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சவக் குழியில் இருப்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார். மேலும், இந்த வாரம் நிகழ்ந்த சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளில் முக்கியமானவை என, திருப்பூர் மாவட்டம், பல்லடம் NEWS 7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளை பட்டியலிட்டுள்ளார்.
தமிழகத்தில் தொடர்கதையாகி வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; தனக்குத் தானே கண்டனம் தெரிவித்து தப்பிக்க நினைக்கும் பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம் !
— AIADMK (@AIADMKOfficial) January 27, 2024
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/dai1DRQngN
”போதைப் பொருட்களே காரணம்”
இதுமட்டுமன்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்களின் ஊடுருவலும் குற்றச் செயல்களும் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. குழந்தைகள், பெண்கள், முதியோர், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவி வருகிறது. இதுபோன்ற குற்றச் செயல்கள் அதிகரிக்க, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கமும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்கு "ஆபரேஷன் கஞ்சா" ஆரம்பித்ததாகச் சொன்ன தமிழகக் காவல் துறை DGP, 2.ஒ, 3.ஒ, 4.ஓ என "ஓ" மட்டுமே போட்டாரே தவிர, போதைப் பொருள் புழக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை.
”தூங்கும் காவல்துறை”
திமுக ஆட்சியில், சமூக விரோதிகள் எந்தவித அச்சமோ, தயக்கமோ, சட்ட நடவடிக்கை மீதான பயமோ இன்றி குற்றச் செயல்களில் ஈடுபட, முதலமைச்சர் ஸ்டாலின் போலவே கும்பகர்ண தூக்கத்தில் இருப்பது வருத்தத்திற்கும், கடும் கண்டனத்திற்கும் உரியது. பத்திரிகையாளர் தாக்கப்பட்டதை ஒரு "சிறப்பு நிகழ்வாக" கருதி நிதி அளிப்பதாக, வினோதமான ஒரு அறிக்கையை வெளியீட்டிருக்கிறார் ஸ்டாலின். அதோடு, தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையின் அலட்சியப் போக்கையும், தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையையும் ஒப்புக்கொள்ள மனமில்லாமல் தப்பித்துக்கொள்ள தனக்குத்தானே கண்டனம் வேறு தெரிவித்துக்கொள்கிறார்.
எதில் நம்பர் 1:
கண்ணாடியைப் பார்த்துதான் தன்னைத்தானே நம்பர் 1 முதலமைச்சர் என்று சொல்லிக்கொள்கிறார் ஸ்டாலின். அவர் எதில் எல்லாம் நம்பர் 1 என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த விழைகிறேன்.
- கடன் வாங்குவதில் நம்பர் 1 முதலமைச்சர்;
- சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் நம்பர் 1 முதலமைச்சர்;
- தமிழகத்தின் மோசமான முதலமைச்சர்கள் பட்டியலில் முதன்மையான முதலமைச்சர்.
இதுமட்டுமல்லாமல், எதிர்வரும் தேர்தல்களில் அதிகமாக தோல்வியுற்ற தொகுதிகள் பட்டியலிலும் நம்பர் 1 இடத்தைதான் பிடிக்கப்போகிறார்.
காவல்துறைக்கு வலியுறுத்தல்:
இனியும் இந்த முதலமைச்சரை நம்பி “எந்தப் பயனும் இல்லை" என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. அதனால், தமிழகக் காவல் துறை அதிகாரிகள், சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வண்ணம் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தாமதமின்றி உடனடியாகக் கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள மேற்கொள்ள” எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.